முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்பல்லோ மருத்துவக் குழுவினர் தொடர்ந்து அவருக்கு தொடர் சிகிச்சை அளித்து வந்தனர்.
லண்டனைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் ரிச்சர்டு பீல் மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வந்த நிபுணர் குழுவினரும் அவ்வப்போது வந்து சிகிச்சை மற்றும் உரிய ஆலோசனைகள் வழங்கினர். அவரது உடல்நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தி வந்தது. அவர் பூரண நலம்பெற பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். கட்சியினர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி வேண்டிக்கொண்டனர்.
டாக்டர்களின் தீவிர சிகிச்சையின் பலனாக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. செயற்கை சுவாசம் உதவியின்றி முதலமைச்சர் ஜெயலலிதா சுவாசிப்பதாகவும், விரைவில் அவர் ஐ.சி.யு.வில் இருந்து தனி அறைக்கு மாற்றப்படலாம் என்றும் டாக்டர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
இந்நிலையில், 58 நாட்கள் தொடர் சிகிச்சைக்குப் பிறகு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று மாலை, ஐ.சி.யு.வில் இருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார். நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் அவர் வீடு திரும்பலாம் என தெரிகிறது.
முதலமைச்சர் ஜெயலலிதா தனி அறைக்கு மாற்றப்பட்டதை அறிந்த அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஆடிப்பாடியும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர். அவர் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்புவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர். முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்பி மக்கள் பணியாற்றுவார் என அ.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி தெரிவித்தார்.