சிலை வைப்பின் பின்னணியில் வடக்கு,கிழக்கு இணைப்பு நிகழ்ச்சி நிரலா?

collage_fotor

சமகால இலங்கை அரசியலில் பல விடயங்கள் பேசு பெருளாகவுள்ளன.அதில் வடக்கு,கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டுமென்ற விடயமும் ஒன்றாகும்.இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு,கிழக்கு மாகாணங்களை இணைப்தை தங்களது பிரதான இலக்குகளில் ஒன்றாக கருதுகின்றது.இதற்கான திட்டமிடல்கள் பல திரைமறைவில் நடைபெற்றும் வருகிறது.இவ்விடயத்தில் மு.கா தமிழ் டயஸ்போறாக்களின் பணத்தை பெற்றுக்கொண்டு செயற்படுகின்றதா என்ற அச்சமும் முஸ்லிம் மக்களிடையே நிலவுகிறது.

இறக்காமம் மாணிக்கமடுவில் வைக்கப்பட்ட சிலை வைப்பிற்கு மு.கா பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் அனுமதி அளித்திருந்தாரென அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் கூறியதாக அதில் கலந்து கொண்ட மாகாண சபை உறுப்பினர் உதுமாலெப்பை பகிரங்க குற்றச்சாட்டை நேரடியாகவே முன் வைத்திருந்தார்.மேலும்,இறக்காமத்தில் இடம்பெற்ற இறக்காம அபிவிருத்தி குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் இது பௌத்த நாடென்றும் அச் சிலையை எந்த ராசாவாலும் அகற்ற முடியாதென பகிரங்கமாக கூறியிருந்தார்.இதே சமகாலப்பகுதியில் கல்முனையில் அமைந்துள்ள நெய்டா அலுவலகத்தை இடமாற்றும் முயற்சிகளும் கிண்ணியாவில் சிலை ஒன்றை நிறுவுவதற்கான முயற்சிகளும் இடம்பெற்றிருந்தன.

மேலுள்ளவற்றின் மூலம் கிழக்கு முஸ்லிம்களை பேரின வாதம் அதிகம் சீண்டிப் பார்க்க முனைவதை அறிந்துகொள்ளலாம்.இதற்கு மு.காவின் மறைமுக ஆதரவும் உள்ளதாக முஸ்லிம்களிடையே காணப்படும் அச்சம் இறக்காம சிலை வைப்பில் பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் நடந்து கொண்ட முறை மூலம் சற்று கணக்கின்றது.இது தொடர்பில் அமைச்சர் ஹக்கீம் பிரதமரை சந்தித்ததாக தனது ஊடக நபர்களைக் கொண்டு அறிக்கை விட்டிருந்தார்.அதனை மன்சூர் இது பற்றி தன்னால் உறுதி செய்ய முடியாது எனக் கூறியிருந்தார்.இதில் அமைச்சர் ஹக்கீம் சிறிதேனும் கவனமின்றி பொடு போக்காக செயற்படுவதையும் அறிந்துகொள்ளலாம்.இது தவிர்ந்து அமைச்சர் ஹக்கீம் இது தொடர்பில் வாய் திறக்கவில்லை.

கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களை பௌத்த பேரினவாதம் நெருக்கடிக்குள்ளாக்கும் போது முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களுடன் இணைந்து பௌத்த பேரினவாதத்தை எதிர்கொள்ளும் சிந்தனைகள் எழும்.இச் சிந்தனையானது சிறு பான்மையின மக்களிடையே வடக்கு,கிழக்கு மாகாணங்கள் இணைவதை நியாயப்படுத்தும்.இறக்காமத்தில் வைக்கப்பட்ட சிலையானது தமிழ் பிரதேசத்தில் வைக்கப்பட்டுள்ள போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு சிறிதும் சத்தமின்றி இருப்பதில் ஏதோ மறைமுக நிகழ்ச்சி நிரல் அரங்கேற்றப்படுவதை அறிந்து கொள்ளச் செய்கிறது.இது போன்ற விடயங்களில் பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் தனித்து நின்று செய்வாரா என்று சிந்தித்தாலும் பல விடயங்களை அறிந்து கொள்ளலாம்.

புரட்சி இப்றாஹிம் மன்சூர்