அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் வருகிற ஜனவரி மாதம் பதவி ஏற்க உள்ளார். இந்த நிலையில் தனது அரசில் நியமிக்கப்பட உள்ள புதிய மந்திரிகள் தேர்வு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறார்.
இதற்கிடையே சர்வதேச நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து பேசி வருகிறார். இந்த நிலையில் ஐப்பான் பிரதமர் ஷின்சோ அபே நேற்று பெருநாட்டில் நடைபெறும் ஆசிய- பசிபிக் வர்த்தக மாநாட்டில் பங்கேற்க செல்லும் வழியில் நியூயார்க் வந்தார். அங்கு மேன்ஹாட்டனில் உள்ள டிரம்ப் மாளிகைக்கு சென்றார். அங்கு அவர் டிரம்பை சந்தித்து பேசினார்.
இச்சந்திப்பு சுமார் 90 நிமிடங்கள் நடந்தது. அப்போது இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அது குறித்து ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்புக்கு வாழ்த்து கூறினேன். எங்களிடையே நல்ல சூழ்நிலையில் வெளிப்படையான பேச்சுவார்த்தை நடந்தது. அவரை சந்திக்கும் முன்பு எதிர்காலத்தில் இரு நாடுகளிடையேயான நட்பு தொடருமா என்பதில் எனக்கு சந்தேகம் இருந்தது. ஆனால் டிரம்பை சந்தித்த பின் அமெரிக்காவின் புதிய தலைவரான டிரம்புடன் இணைந்து பணியாற்ற முடியும் என்ற மிகப்பெரிய நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது என்றார்.
இரண்டாம் உலகப் போருக்கு பிறகு ஜப்பான் பொருளாதார வளர்ச்சிக்கு அமெரிக்கா உதவியது. அதை தொடர்ந்து இருநாடுகளும் நட்பு நாடுகளாக இருந்து வருகின்றன. ஆனால் தேர்தல் பிரசாரத்தின் போது டிரம்பின் பேச்சு அமெரிக்க நட்பு நாடுகளுடன் ஆன உறவில் சந்தேகத்தை கிளப்பியது.
எனவே தான் ஜப்பான் பிரதமர் அபே புதிய அதிபர் டிரம்ப் மீது சந்தேகத்துடன் இருந்தார். தற்போது அவர் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளதால் மீண்டும் இருவரும் சந்தித்து நீணட விவாதம் நடத்த உள்ளனர்.