உலகின் “மிக சோகமான பனிக்கரடி” என்று அழைக்கப்பட்ட கரடி சீன வர்த்தக வளாகத்திலிருந்து அது பிறந்த ஓஷன் பார்க்கிற்கு தற்காலிகமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
“பிசா” என்று அழைக்கப்படும் அந்த பனிக்கரடி குவாங் ஜோவில் “கிராண்ட் வியு’’ என்று அழைக்கப்படும் நீர்வாழ் உயிரனங்களின் காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது; தற்போது அங்கு சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் கரடி தற்காலிகமாக அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்த வர்த்தக வளாகம், “பிசாவின் வருகைக்காக காத்திருங்கள்” என சீன சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளது.
பிசா வைக்கப்பட்டிருந்த குவாங் ஜோவில் உள்ள நீர்வாழ் உயிரனங்களின் காட்சியகத்தை மூட வேண்டும் என்று கோரி சுமார் மில்லியன் மக்கள் மனு ஒன்றில் கையெழுத்திட்டிருந்தனர்.
“வர்த்தக வளாகத்தின் உள்ளே சிறிய கூண்டிற்குள் வாழ்ந்த பிசா தற்போது தனது உடலின் ரோமங்களில் சூரிய வெப்பத்தை உணர முடியும்; புது காற்றை சுவாசிக்க முடியும்; மேலும் தனக்கு மேலே உள்ள வானத்தை பார்க்க முடியும்”, என சர்வதேச மனித நேய சொசைட்டியின் சீன கொள்கை வல்லுநர் பீட்டர் லீ தெரிவித்துள்ளார்.
“ஆனால் நிரந்தரமாக பிசாவை அனுப்பி வைக்குமாறு வளாக உரிமையாளர்களிடம் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்; எந்த வித சீரமைப்பு பணிகளும் இந்த கரடிக்கு தகுந்த இடமாக மாறாது எனவே அந்த வளாகத்திற்கு பிசாவை திருப்பி அனுப்புவது கொடூரமான இதயமற்ற செயல்”, என தெரிவித்துள்ளார்
“பிசா நோய்வாய்ப்பட்டிருப்பதும், கவலையுடன் காட்சியளிப்பதும் வெளிப்படையாக தெரியவந்ததால் தான் அங்கிருந்து அதனை அனுப்பி வைக்க அந்த வர்த்தக வளாகம் முடிவு செய்திருக்கலாம்” என லீ தெரிவித்துள்ளார்.
மேலும் நாளடைவில் மக்களின் பார்வைக்கு வைக்க முடியாத அளவிற்கு அதன் சுகவீனம் வெளிப்படையாக தெரியவரும் என அந்த வர்த்தக வளாகத்தை தாங்கள் எச்சரித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.