இலங்கை முஸ்லிம்களுக்கு தலைவனெனத் தம்பட்டமடிப்பவர் முழு முஸ்லிம் சமூகத்துக்கே கேவலத்தை ஏற்படுத்தி விட்டார்!!

                                                 தலைவர் என்பவரின் தரம் தாழ்ந்த பேச்சு!
                                                         இருந்த  மரியாதையும் இப்போது போச்சு!!
15073416_1907120062854666_6128739255790419746_n
–உம்மத்தில் ஒருவன்–
கடந்த வெள்ளிக்கிழமை (11 /11 /2016 ) புத்தளத்துக்கு ஒரு சோக நாளாக அமைந்துவிட்டது. வரலாற்றில் அந்த வெள்ளிக்கிழமை மாலையானது  பெரும் கறையைப் பூசிக் கொண்டது. எத்தனையோ அரசியல் மேதைகளையும் புத்திஜீவிகளையும் படித்துப் பட்டங்கள் பெற்றோரையும் கண்ணியத்துக்குரிய உலமாக்களையும் இஸ்லாமியத்தின் வழியில் வாழ்கின்ற சான்றோர்களையும் கொண்ட அந்தப் புத்தளத்து மண் வெட்கத்தால் கூனிக் குறுகிப் போய்விட்டது. இதற்கெல்லாம் காரணமாக இருந்தது, இலங்கை முஸ்லிம்களின் தனித்துவத் தலைவராகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டிருக்கும் ரவூப் ஹக்கீம் என்பவரின் தரம் தாழ்ந்த மேடைப் பேச்சுத்தான்.
சாணக்கிய தலைவரென்று தனக்குத்தானே சான்றிதழ் கொடுத்துக்கொண்டிருக்கும் ரவூப் ஹக்கீம் அந்த மேடையிலே சறுக்கிய தலைவனாகவே வார்த்தைகளை உதிர்த்துக் கொண்டிருந்தார். இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கே தலைவனெனத் தம்பட்டமடிக்கும் அவர் முஸ்லிம் சமூகத்துக்கே கேவலத்தை ஏற்படுத்தி விட்டார்.
14955784_1907119572854715_1770501024787865654_n
ஒரு சமூகத்தின் தலைவன் மேடைகளில் பேசும்போது மிக்க கவனத்துடன் வார்த்தைகளை வெளிப்படுத்த வேண்டும். மாறாக, வாய்க்கு வந்தபடியெல்லாம் உளறக் கூடாது. ஆனால் நமது தலைவன் உளறிக் கொட்டியதைத் தவிர உருப்படியாக எதையும் அங்கு பேசவில்லை.
பதினாறு வருடங்களாகத் தான் தலைமை தாங்கும் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்குக்  குறிப்பிடும்படியான எந்தச் சேவைகளையோ அல்லது அபிவிருத்திகளையோ மேற்கொண்டிருக்காத தனது கையாலாகாத்தனத்தை மறைப்பதற்கும், நமது சமூகத்திற்கான எந்த உரிமைகளையும் பெற்றுத் தராமல் தனது சுயநலத்திற்குச் சோரம் போன வரலாறுகளை இருட்டடிப்புச்  செய்து கொள்வதற்குமான ஓர் அரங்காகவே புத்தளத்து மேடையை  ரவூப் ஹக்கீம் பயன்படுத்திக் கொண்டார்.
மக்களுக்காகத் தான் கட்டி முடித்த ஒரு பாடசாலையை அல்லது ஓர் ஆஸ்பத்திரியைத் திறந்து வைக்கவல்ல; தனது முயற்சியால் அமைத்துக் கொடுக்கப்பட்ட ஏழைகளுக்கான நூறு வீடுகளைக் கையளிப்பதற்காக அல்ல; தனது சொந்தப் பணம் கொண்டு போட்ட ஒரு பாதையில் பஸ் சேவைகளை வழங்குவதற்காக அல்ல; வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு அரச நியமனங்களை வழங்கி வைப்பதற்குமல்ல புத்தளத்தில் கூட்டம் நடந்தது. மாறாக,  தனது கட்சியிலிருந்து விலக்கிய ஒருவரை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்வதைக் கொண்டாடும் கோமாளிக் கூத்துக்காகவே அந்தக் கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான றிசாத் பதியுதீனை மறைமுகமாக இகழ்ந்து பேசி , அண்மைக்காலத் தனது தோல்விகளுக்கும், வெகுவாகச் சரிந்துவிட்ட செல்வாக்கினால் உண்டான வெப்புசாரத்துக்கும் அவர் வடிகால் தேடிக் கொண்டார்.  இதுநாள்வரை தனது சமூகத்துக்குத் தான் ஆற்றிய பணிகளென்ன, எதிர்காலத்தில் தனது சமூகத்தின் இருப்புக்கும் பாதுகாப்புக்கும் வளத்திற்கும் தான் வரைந்துள்ள திட்டமென்ன என்பதை மக்களிடம் விளக்க வேண்டிய தலைமைத்துவம் கேவலம், வடிவேலுவின் நகைச்சுவை சொல்லித் தனது சொந்த வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டதைச் சகிக்க முடியாமல் பலர் காரித் துப்பினார்கள்.
அது போதாதற்கு மகிந்த ராஜபக்ஷவுக்கும் மேர்வின்  சில்வாவுக்கும் புகழாரங்கள் வேறு. மகிந்த ராஜபக்ஷவிடம் நல்ல குணங்கள் நிறைந்து கிடக்கிறதாம். மேர்வின் சில்வா அவரது நல்ல நண்பராம்…ஆமாம்;
மகிந்த ராஜபக்ஷவை மீண்டும்  ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கான வெள்ளோட்டமாகத்தான் அவரது குரல் மேடையில் ஒலித்தது.
இன்னும், தான் தேசிய பட்டியல் கொடுத்த எல்லோருமே கட்சியை விட்டுப் போய்விட்டதாகவும், இன்னும் சிலர் இருப்பதாகவும், அவர்கள் செல்லாக் காசுகள் என்றும் சொல்கிறார். அவ்வாறு அவர் செல்லாக் காசுகள் என்று வர்ணித்தது, மறைந்த தலைவரோடு தோளோடு தோள் நின்று  கட்சிக்காகவும்  முஸ்லிம் சமூகத்திற்காகவும் பல்வேறு  தியாகங்களைச் செய்த ஹஸனலியையும் பஷீர் சேகுதாவூதையும்தான் என்பது சிறு பிள்ளைகளுக்கும் கூட நன்கு புரியும். 
இவையனைத்தையும் விட, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்காகவே வாழ்ந்து, எச்சந்தர்ப்பத்திலும் ரவூப் ஹக்கீமைக் கைவிடாது காப்பாற்றி வந்த, மறைந்த  நூர்தீன் மஷூர் ஹாஜியாருக்குப் ‘பாழாய்ப் போனவன்’ என்ற பட்டம் வேறு வழங்கி வைத்தார் நமது தானைத் தலைவர். ”இவன், இந்தப் பாழாய்ப் போன நூருதீன் மஷூர்”  என்று பகிரங்கமாக மேடையிலே வாய் கூசாமல் சொல்கிறார். அதைக் கேட்டுக் கைகொட்டிச் சிரிப்பதற்கும் அங்கே அவரது அடிவருடிகள் இருந்தார்களென்றால், நாம் எப்படியான ஒரு கேடுகெட்ட தலைவனைப் பெற்றிருக்கிறோமென்று எண்ணிப் பார்க்க வேண்டும்.    
மரணித்துப் போன ஒருவரை, அதுவும் மக்களால் இன்னமும்  நேசிக்கப்படும் ஒரு மகா மனிதரை  ”பாழாய்ப் போன மஷூர்” என்று இகழ்ந்து பேசுகின்ற இவர்தானா முஸ்லிம்களின் தலைவர் என்று தன்னைச் சொல்லிக் கொள்கிறார்…?
 
”இறந்தவர்களைப் பற்றி நல்லதையே பேசுங்கள்” என்று சொல்லும் நமது உயிரான இஸ்லாத்தையே இவரது பேச்சு கொச்சைப்படுத்திவிட்டது. இதுநாள் வரை இவர் மீதிருந்த ஓரளவு நல்லெண்ணம் கூட, இந்தப் பேச்சோடு அடியோடு போய்விட்டதாக மஷூர் ஹாஜியார் மேல் அன்பு கொண்டவர்கள்  சொல்கிறார்கள்.
நமது முஸ்லிம் சமூகத்தின் மீது கொண்ட  இரக்கத்தாலும் அன்பினாலும் தக்க தலைமையொன்றைத் தருகின்ற நோக்கில் அல்லாஹ்தான் இவரது நாக்கைப் புரண்டு பேச வைக்கின்றானோ, என்னவோ!
 
அல்லாஹ் ஒருவனே அறிந்தவன்!