இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட 105 காரட் மதிப்பு கொண்ட வைரம் தான் தற்போது வரை உலகின் மிகப்பெரிய வைரமாக கருதப்படுகிறது. இதனை கோஹினூர் வைரம் என்று வர்ணிக்கின்றனர். இந்தியாவுக்கு சொந்தமான இந்த வைரம் பல நூற்றாண்டுகளாக பலரிடம் கைமாறி இறுதியாக 1850-ல் பிரிட்டன் மகாராணி விக்டோரியாவிடம் சென்று சேர்ந்தது.
அப்போது முதல் இந்த வைரம் பிரிட்டன் மன்னர் பரம்பரையின் சொத்தாக மாறியுள்ளது. தற்போது மகாராணியின் மகுடத்தில் இந்த வைரம் பதிக்கப்பட்டு, ஆண்டு தோறும் லண்டனில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படுகிறது.
இதனிடையே, கோஹினூர் வைரத்தை மீண்டும் இந்தியா கொண்டு வர வலியுறுத்தி அகில இந்திய மனித உரிமைகள் மற்றும் சமூக நீதி முன்னணி என்ற அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கோஹினூர் வைரத்தை மீட்பது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அந்த நோட்டீசில் மத்திய அரசு 4 வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.