அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றிப்பெற்றதை பாராட்டி உள்ள ஐ.எஸ். மற்றும் அல்-கொய்தா பயங்கரவாத இயக்கங்கள் அமெரிக்காவிற்கான ‘இருண்ட நேரம்’ தொடங்கிவிட்டது என்று கூறிஉள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி என்ற செய்திகள் வெளியாக தொடங்கியதுமே, மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் பயங்கரவாதிகள் வெற்றியை கொண்டாட தொடங்கிவிட்டதாகவும், இதுதொடர்பான பதிவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதாகவும் மேற்கத்திய பத்திரிக்கைகள் தகவல்கள் வெளியிட்டு உள்ளது. ஐ.எஸ். மற்றும் அல்-கொய்தா பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்புடைய சமூக வலைதளங்கள், அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றிப்பெற்றதை பாராட்டிஉள்ளன என்று வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டு உள்ளது.
உள்நாட்டு அமைதியின்மை மற்றும் புதிய வெளிநாட்டு ராணுவ கொள்கையினால் அமெரிக்காவின் வல்லரசு பலமானது உறிஞ்சப்படும். அமெரிக்க வல்லரசு என்ற பலத்தை உறிஞ்சிவிடலாம். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு டிரம்பின் வெற்றியானது அமெரிக்காவிற்கு எதிராக இஸ்லாமியர்களின் விரோதப் போக்கை கொண்டுவரும், இது அவர்களுக்கு எதிரான வெளிப்படையான மற்றும் மறைக்கப்பட்ட வெறுப்பு காட்டும் என்று ஜிகாதிகள் இணையதளங்களை கண்காணித்து வரும் எஸ்ஐடிஇ என்ற புலனாய்வு குழு தெரிவித்து உள்ளது என்று செய்திகள் வெளியிடப்பட்டு உள்ளது.
அல்-கொய்தா வெளியிட்டு உள்ள தகவல்களில், அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தாக்கப்பட்ட சம்பவத்தை குறிப்பிட்டு, 9-11-ல் அல்-கொய்தாவினால் அமெரிக்காவிற்கு பேரழிவு ஏற்பட்டது, இப்போது அமெரிக்க மக்களின் கையாலே அமெரிக்கா ஒரு பேரழிவை ஏற்படுத்தி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. முஜாகிதீன்களை டிரம்ப் ஒன்று சேர்ப்பார் என்று எச்சரிக்கை விடுத்து உள்ள பயங்கரவாதிகள், டொனால்டு டிரம்ப் வரட்டும், நாங்கள் தயார் என்று பயங்கரவாதிகள் எச்சரிக்கையும் விடுத்து உள்ளனர் என்று செய்தியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் அடுத்த 4 ஆண்டுகளுக்கு டொனால்டு டிரம்ப் ஒரு வைகோல் மனிதன் போன்று ஆட்சி செய்வார், முன்னதாக புஷ் ஆட்சி செய்தது போன்று என்று பயங்கரவாதிகள் கூறிஉள்ளனர்.