”அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்”

mosque-shadow-620x350

இம்ரான்- ஹன்னா தம்பதியருக்குப் பிறந்த மர்யமை, பைத்துல் முகத்தஸில் தங்கி, சேவை செய்ய அர்ப்பணிக்க வேண்டுமென்று, ஹன்னா தனது சகோதரியின் கணவர் ஜக்கரிய்யா (அலை) அவர்களிடம் ஒப்படைக்கச் சென்றார்கள். குழந்தை பிறப்பதற்கு முன்னதாக இப்படியான நேர்ச்சை செய்துவிட்டதைப் பற்றி ஜக்கரிய்யா (அலை) அவர்களிடம் ஹன்னா தெரிவித்தார். குழந்தை மர்யமை வளர்க்கும் பொறுப்பை ஜக்கரிய்யா ஏற்றுக் கொள்ள முன் வந்தார்.

குழந்தை மர்யமை பொறுப்பேற்க பலரும் போட்டி போட்டனர். அறிஞர்களுக்கிடையே சில கருத்துவேறுபாடுகளும் இருந்தன. ஆகையால் எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்தார்கள். அவரவர் தமது எழுதுகோலை ஆற்றில் வீச வேண்டும், யாருடைய எழுதுகோல் மூழ்காமல் மிதந்து வருகிறதோ அவரே மர்யமை பொறுப்பேற்பவர் என்று தீர்மானமானது.

அதன்படி எல்லோரும் தமது எழுதுகோலை ஆற்றில் வீசினர். ஜக்கரிய்யா (அலை) அவர்களின் எழுதுகோலைத் தவிர மற்ற எல்லோருடைய எழுதுகோலும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. ஆகையால் ஜக்கரிய்யாவே மர்யமை வளர்க்கும் பொறுப்பை ஏற்றார்கள்.

குழந்தை மர்யமை மிகவும் பொறுப்பாக ஜக்கரிய்யா (அலை) வளர்த்தார்கள். குழந்தையைப் பேணிப் பாதுகாப்பாகப் பார்த்துக் கொண்டார்கள். மிகவும் நேர்மையானவராக, உண்மையாளராக, நம்பிக்கைக்குரியவராக வளர்க்கப்பட்டார். அவருக்கு இறைவனைத் தொழுது வணங்கவும் கற்றுத் தந்தார்கள். 

மர்யமை சந்திக்கத் தொழும் அறைக்குப் போகும் போதெல்லாம், மர்யமிடம் உணவு இருப்பதைக் கண்டார்கள் ஜக்கரிய்யா (அலை). அதுவும் விதவிதமான கனி வகைகளைக் கண்டு அதிசயித்த ஜக்கரிய்யா (அலை), “மர்யமே! இவ்வுணவானது உனக்கு எங்கிருந்து வந்தது?” என்று கேட்டார்கள். அதற்குச் சிறுமி மர்யம், “இது அல்லாஹ்விடமிருந்து வந்தது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்” என்று பதிலளித்தார்கள். 

அதைக் கேட்ட ஜக்கரிய்யா (அலை) அந்த இடத்திலேயே தமது நீண்ட நாள் விருப்பத்தை இறைவனிடம் பிரார்த்தித்தார். “அல்லாஹ், என் பிரார்த்தனைகளை ஏற்பவனே, உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக. என்னுடைய இத்திருப்பணிகளைத் தொடர்வதற்காவது எனக்கு ஒரு சந்ததியைத் தந்தருள்வாயாக” என்று அழுத வண்ணம் துதித்தார்கள்.
அல்லாஹ் தான் நாடியதை செய்து முடிகின்றான்.

திருக்குர்ஆன் 3:35-38