ஹக்கீமே! கண்டிச் சிங்களவர்களுக்காக அம்பாறை முஸ்லிம் மக்களை கைவிட்டு விடாதீர்கள்

 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான
கௌரவ ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு !

rauff hakeem thero

மண்ணுக்காக மண்ணைக் காட்டிக் கொடுத்துள்ள உங்கள் கட்சியை சேர்ந்த நபர் மீது நீங்கள் கட்சி மட்டத்திலேனும் முதல் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பின்னர் குறித்த புத்தர் சிலையை அகற்றச் செய்ய வேண்டும். இன்றேல் நீங்களும் இவர்களைத் தாலாட்டி வளர்ப்பதாகவே உங்கள் மீது பழி சொல்ல நேரும்.

இந்த விடயத்தில் நீங்கள் நிச்சயம் நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்பிக்கை கொண்டுள்ளேன். நீங்கள் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட போது முஸ்லிம் மக்கள் மட்டுமல்லாது சிங்கள மக்களுமே உங்களுக்கு வாக்களித்து உங்களை நாடாளுமன்ற உறுப்பினராக்கி அமைச்சராக்கினர். இந்த நிலையில், கண்டி மாவட்ட சிங்கள பௌத்தர்களின் எதிர்ப்பை நீங்கள் சந்திக்க வேண்டி வருமோ என்ற அச்சத்தால் அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களைக் கைவிட்டு விடாதீர்கள். மாணிக்கமடு புத்தர் சிலை விவகாரத்தில் நீங்கள் தலையிட்டு நீதியைப் பெற்றுக் கொடுங்கள்.

கடந்த கால மேடைப் பிரசாரங்களின் போது நீங்கள் பல விடயங்களைத் தெரிவித்திருந்திர்கள். கட்சிக்குள்ளிருந்து கட்சிக்கும் சமுகத்துக்கும் எதிராக செயற்படும் எவரையும் மன்னிக்கமாட்டேன். எங்கள் சமுதாயத்துக்கு எதிராக வலிந்து மேற்கொள்ளப்படும் அனைத்து அநீதிகளுக்கும் எதிராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை கடுமையாகக் குரல் கொடுத்து எதிர்க்கும் என்றெல்லாம் கூறியிருந்தீர்கள். இப்போது உங்களுக்கு அதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. துரிதமாகச் செயற்பட்டு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுங்கள்.

முஸ்லிம்கள் அதிக குடிப்பரம்பலைக் கொண்ட நான்கு தொகுதிகளே இலங்கையில் உள்ளன. அவற்றில் மூன்று தொகுதிகளை அம்பாறை மாவட்டம் தன்னகத்தே கொண்டுள்ளதால் நாங்கள் இப்போது இந்த மாவட்டத்தில் பெரும்பான்மைச் சமூகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இந்த நிலையில், இறக்காமம் மாணிக்கமடுவில் இன்று சிலை வைக்கப்பட்டுள்ளது. சிலை வைத்தவர்கள் இப்போது மடம் அமைக்க வேண்டுமென்கிறார்கள். நாளை அங்கு சிங்கள மக்களைக் குடியேற்ற வேண்டும் என்பார்கள். சிங்களவர்களின் அனைத்து அபிலாஷைகளும் எவ்வித எதிர்ப்பும் இன்றி இலகுவாக நிச்சயம் நிறைவேறும்.

அப்படி ஒன்று நடந்தால் அம்பாறை மாவட்டத்தின் மூன்று தொகுதிகளில் ஒரு தொகுதியான சம்மாந்துறை தொகுதியில் முஸ்லிம்களின் இருப்பு கேள்விக் குறியாகி, சிங்கள பெரும்பான்மை கிராமமாக அது மாற்றமடையலாம். அதனால் முஸ்லிம் தொகுதிகளில் ஒன்றை நிச்சயசமாக நாம் இழக்கும் நிலை ஏற்படும். சிலவேளை எம்மிடமிருந்து அம்பாறை மாவட்டமே பறிபோய் விடலாம். இதனை உங்களுக்கு எச்சரிக்கையான எதிர்வு கூறலாக இன்று சொல்லி வைக்க விரும்புகிறேன். 

இவ்வாறு எல்லாம் இடம்பெற்றால் இவற்றுக்கெல்லாம் பொறுப்பு கூறுவோர் சிங்களவர்களும் அல்லர்.. முஸ்லிம்களும் அல்லர் .. மாறாக முஸ்லிம் காங்கிரஸ்தான் என்பதனை வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அம்பாறை மாவட்டம் என்பது முஸ்லிம் காங்கிரஸின் கோட்டை என்று பலரும் கூறுவது போல் நீங்களும் கூறுகிறீர்கள். எனவே இந்த விடயத்தில் தலையிடுவது உங்களது தார்மீகப் பொறுப்புத்தானே?

 

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்