போராளிகளே புறப்படுங்கள் ! கவிஞர் ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

siddique

 

போராளிகளே புறப்படுங்கள்!
———————————–

போராளிகளே புறப்படுங்கள்…
புதிதாக சிலை ஒன்றை
வைப்பதற்கு போராளிகளே
எங்களுடன் புறப்படுங்கள்….!
————–
நமது சமூகம்
தோற்று விட்டது என்று
நீங்கள்
குழம்பிவிடக் கூடாது!
அது தோற்கவே
வேண்டும் என்பதற்காக
போராளிகளே
எங்களுடன் புறப்படுங்கள்!
————–
கரையோர மாவட்டம்
கல்முனைக்கு வேண்டாம் – மாய
கல்லிமலை சிலை
ஒன்றே போதும் நமக்கு
போராளிகளே புறப்படுங்கள்….
————–
உங்கள் தலைவனுக்கு
ஒன்றுமே தெரியாது
என்பதனை நீங்கள்
எப்போதும் மறந்திடாதீர்கள்!
தலைவர்கள் எப்போதும்
தத்துவம் மட்டுமே பேசுபவர்
என்பதனை நான்
சொல்லித் தரவில்லையா?
என்னை அதற்காய் நீங்கள்
மன்னித்து விடுங்கள்
போராளிகளே புறப்படுங்கள்….
————–
அநியாயப் பாதையில் நாங்கள்
நடந்து செல்வதால்
நியாயப் பாதையை நீங்கள்
தேர்ந்து விடாதீர்கள்!
போராளிகளே எங்கள்
பின்னால் நீங்கள் புறப்படுங்கள்!
————–
சாய்ந்தமருதுக்கு பிரதேச சபையா
சாகும் வரை நடக்கவே கூடாது
பேசிக் கொள்வோம் தருவதாக
பேச்சு மட்டும் மாமூலாகட்டும“…
போராளிகளே புறப்படுங்கள்..
————–
காட்டிக் கொடுக்கும் எங்கள்
போராட்டத்தில்
சூடுண்டாலும் வெட்டுண்டாலும்
சாகப் போவது சமூகம்தான்!
சந்தோஷம் எல்லாம் நமக்குத்தான்!
போராளிகளே புறப்படுங்கள்..
————–
ஓரத்தில் நின்று கொண்டு
ஓய்வெடுக்க நேரமில்லை -மாயக்
கல்லிமலைக்
கடவுளை வணங்க
போராளிகளே புறப்படுங்கள்..
————–
இந்த வாக்காளர்களை
திருப்திப்படுத்த உங்கள்
நேரத்தை வீணாக்க
வேண்டாம்!
நாரே தக்பீரும்
அல்லாஹு அக்பரும்
நமக்கு இறுதி வரை
கை கொடுக்கும்
போராளிகளே புறப்படுங்கள்..
————–
கறைகளால் தோய்ந்திருக்கும்
எங்களது வேஷத்தை
கலைத்து விடாதீர்கள்!
வேண்டுமெனில் எங்களுடன்
விரும்பி இணைந்து
வேண்டியதனை பெறுங்கள்
போராளிகளே எங்களுடன்
புறப்படுங்கள்..
————–
எங்களது மூக்குக்குள்ளும்
காதுகளுக்குள்ளும்
பஞ்சுத் துண்டங்களை
வைத்தெங்கள்
முகத்தோற்றத்தை இன்னும்
பழுதாக்கி விடாதீர்கள்
எங்களது அகத் தோற்றங்களே
அசிங்கமானவைதானே?
போராளிகளே புறப்படுங்கள்..
————–
ஓரத்தில் நின்றுகொண்டு
ஒன்றுமே செய்யாமல்
கதையளக்கும் எங்கள்
கப்ஸாக்களை பாராட்டி
விருது தர போராளிகளே
நீங்கள் விரைந்து
புறப்படுங்கள்!
————–
ஆலமரமாய்
ஆயிரம் விழுதுகளுடன்
நமது மரம் வாழ வேண்டும் –
அதன் கீழ
நல்லதொரு சிலை வைத்து
நாம் வணங்க வேண்டும்
போராளிகளே புறப்படுங்கள்!
————–
எனது கவி இனிது முடிந்தது
உங்கள் பணிகளைச் செய்வதற்காய்ப்
புறப்படுங்கள் போராளிகளே!
————————–
( இந்தக் கவிதையானது மர்ஹும் மாமனிதர் அஷ்ரப் அவர்களின் “போராளிகளே புறப்படுங்கள்…” என்ற கவிதையின் சாயலை ஒத்தது. அவரின் குறித்த கவிதையின் பல வரிகளைத் திருடியும் திருத்தியும் மோசடி செய்தும் நான் எழுதியுள்ளேன். மாமனிதரே! மறைந்த தலைவரே!! என்னை மன்னித்துக் கொள்ளுமாறு மன்றாடி உங்களைக் கேட்கிறேன் )

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்