கிரிக்கெட் விதியை மீறி விராட் கோஹ்லி அனுஷ்காவை சந்தித்துள்ளமையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு சின்னசாமி அரங்கில் நடைபெற்ற 55ஆவது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ரோயல் செலஞ்சர்ஸ் அணி, டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியின் இடைநடுவே கடும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் இடைநிறுத்தப்பட்டது. இதனையடுத்து அரங்குக்கு திரும்பிய விராட் கோஹ்லி பார்வையாளர் அரங்கில் அமர்ந்திருந்த தனது காதலி அனுஷ்கா சர்மாவை சந்தித்து உள்ளார். இதன்போது அப் பகுதியில் யுவராஜ் சிங் மற்றும் தினேஷ் கார்த்திக்கும் இருந்துள்ளனர்.
கிரிக்கெட் விதிப்படி போட்டி முடியும் வரை அதாவது இறுதி பந்து முடியும் வரை வீரர்கள் தங்களுக்கு உரிய பகுதியில் இருந்து சென்று வேறு ஒருவரை சந்திக்க கூடாது. மேலும் ரசிகர்களுடன் நேரடியாக சந்தித்து பேச முடியாது.
இந்நிலையில் விராட் கோஹ்லி அனுஷ்காவை சந்தித்தமை மைதானத்தில் திரையிலும் ஒளிபரப்பானது.
இது ஊழல் தடுப்பு பாதுகாப்பு நெறிமுறைகளை மீறிய செயலாகும் எனவும் மழையால் ஆட்டம் முடிவுக்கு வந்து இருந்தால் பரவாயில்லை முடிவு அறிவிக்கபடுவதற்கு முன்பாகவே ஒரு அணியின் எதிர்கால அணித் தலைவர் இவ்வாறு செய்தது முறையான விடயம் இல்லை எனவும் ஊழல் மற்றும் பாதுகாப்பு சிரேஷ்ட் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அணியின் தலைவர் என்ற வகையில் அவருக்கு விதிமுறைகள் தெரியும். போட்டியின் போது யாரும் வீரர்களை சந்திக்க அனுமதி இல்லை. மற்றும் வீரர்கள் தங்களுக்கு உரிய பகுதியில் இருந்து செல்ல அனுமதியும் இல்லை. இந்த பிரச்சினை கண்டிப்பாக பிசிசிஐ க்கு கொண்டு செல்லப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.