சு.க. உறுப்பினர்கள் சிலர் எப்போது அழைத்தாலும் எங்கள் பக்கம் வருவதற்கு தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளனர்-மஹிந்த

சமகால அரசாங்கத்தின் மீது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பிர்கள் மிகவும் வருத்தத்தில் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

mahinda

இதன்காரணமாக மாற்று அரசியல் சக்தி ஒன்றை உருவாக்க வேண்டும் என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுதந்திர கட்சி உறுப்பினர்கள், தன்னிடம் தெரிவித்துள்ளதாக மஹிந்த குறிப்பிட்டார்.

உடுகம்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய மஹிந்த,

வடக்கில் ஏற்பட்டுள்ள ஆவா குழு கோத்தபாய ராஜபக்ச உருவாக்கியதாக சிலர் எங்களை மீது குற்றம் சுமத்தினார்கள். நாங்கள் ஒரு போதும் அவ்வாறானவைகளை மேற்கொண்டு நாட்டு மக்களுக்கு துரோகம் செய்ய மாட்டோம். கடுகளவேனும் நாங்கள் அவ்வாறான துரோகிகளாகவில்லை.

வெளிநாட்டு சக்திகள் இணைந்து தான் எங்கள் அரசாங்கத்திற்கு எதிராக சூழ்ச்சி செய்தார்கள். தற்போது மக்கள் இதனை கொஞ்சம் கொஞ்மாக புரிந்துக் கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

தமிழ். முஸ்லிம் மக்கள் அமைப்புகள் தற்போது எங்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்கின்றார்கள். அவர்களும் தவறிழைத்து விட்டதாக தற்போது புரிந்துள்ளார்கள்.

மத்திய வங்கி மோசடி ஆசியாவில் இடம்பெற்ற மிகப்பெரிய மோசடியாகும். இந்த கொடுக்கல் வாங்கல்களில் அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் பில்லியன் கணக்கில் வருமானம் பெறுகின்றார்கள்.

இந்த மோசடிக்கு ஜனாதிபதி, பிரதமர் உட்பட நல்லாட்சி அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும். இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள அனைவருக்கு எதிராகவும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இந்த அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வு பிரிவு, நிதி மோசடி விசாரணை பிரிவுகளில் உட்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

அரசாங்கத்தில் இணைந்துள்ள சுதந்திர கட்சி உறுப்பினர்கள் திருப்தியாக இல்லை. எப்போது அழைத்தாலும் எங்கள் பக்கம் வருவதற்கு அவர்கள் தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளனர் என மஹிந்த மேலும் தெரிவித்துள்ளார்.