தென்கொரியா அதிபர் பதவி விலக வேண்டும் – மக்கள் பாரிய போராட்டம் !

தென்கொரியாவில் அதிபராக இருப்பவர் பார்க் கியூன் ஹை. இவரது 40 ஆண்டு நெருங்கிய தோழி சோய் சூன் சில். இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களை நடத்தி வருகிறார். அதோடு தொண்டு நிறுவனத்திற்கு வந்த பல கோடி ரூபாய் நிதியை தனது சொந்த பயன்பாட்டிற்கு செலவழித்ததாக கூறப்படுகிறது.
201611051806198579_tens-of-thousands-protest-in-south-korea-call-for-president_secvpf
அதிபர் தோழி என்பதால் அரசு அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தியும், அரசு விவகாரங்களில் தலையிட்டதாகவும் அவர் மீது புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் அதிபர் பார்க் கியூன் ஹை பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி வருகின்றன.

தற்போது பொதுமக்களும் அதிபருக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர். இன்று தென் கொரியாவின் தலைநகர் சியோலில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடினார்கள். அப்போது அதிபர் பார்க் கியூன் ஹை பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனால் அதிபர் பார்க் கியுன் ஹை-யிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்த ஊர்வலத்தில் சுமார் 43 ஆயிரம் பொதுமக்கள் கையில் மெழுகுவர்த்திகளை ஏந்திச் சென்றனர் என்று பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் கூறினார்கள். ஆனால், பேராட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் சுமார் ஒரு லட்சம் மக்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றார்கள் என்று கூறினார்கள்.

2008-ம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. அதன்பின் தற்போதுதான் அந்த அளவிற்கு பெரிய போராட்டம் நடைபெற்றுள்ளது.

முன்னதாக, அதிபர் பாக் கியூன் ஹை நாட்டு மக்களிடையே ‘டிவி’ மூலம் தனது விளக்கத்தை அளித்தார். அவர் கூறுகையில், ‘‘தென் கொரியாவில் ஊழல் நடக்க நானும் காரணமாகி விட்டேன். அஜாக்ரதையாக இருந்தததால் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து விட்டன. ஊழலுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. ஊழல் தொடர்பாக என்னிடமும் விசாரணை நடத்தலாம் என்பதை அதிபர் மாளிகை அலுவலகத்திலும், பாதுகாப்பு அமைச்சக அலுவலகத்திலும் தெரிவித்து விட்டேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். தோழி என்பதால் சோய் சூன் சில்லை முழுமையாக நம்பி விட்டேன். இதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்’’ என தெரிவித்தார்.

மேலும், அரசாங்கத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வரும் நிலையில் அவர் தமது அமைச்சரவையில் முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளார். புதிய பிரதமரை அவர் நியமித்துள்ளார். அத்துடன் அமைச் சரவையில் இரண்டு புதிய அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். 

கிம் பியாங் ஜூன் என்பவர் நாட்டின் புதிய பிரதமராகவும் , நிதித்துறை செயலாளராக பணியாற்றிவந்த ஜிம் ஜாங் யாங் என்பவர் நிதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.