இறையச்சத்தோடு வாழ்வோம்; இம்மை, மறுமையின் நன்மைகளைப் பெற்றுக்கொள்வோம்..!

praying-in-kaabaஇஸ்லாம் என்ற அழகிய மாளிகை இறைநம்பிக்கை, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் என்ற ஐம்பெரும் தூண்களின் ஆதிக்கத்தில் நிலை பெற்றுள்ளது. இருந்தாலும் அவை எல்லாம் அடிப்படை கடமைகளே தவிர, அவை மட்டுமே அந்த அழகிய மாளிகையின் அத்தனை அழகு அம்சங்களுக்கும் பொறுப்பாகிவிட முடியாது.

அல்லாஹ் இட்ட கட்டளைகளின்படியும் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய வழிமுறைப்படியும் அந்த கட்டளைகளை சிறப்பாக செய்ய வேண்டும். அப்போது தான் அதற்கான சன்மானத்தை இறைவனிடம் நாம் பெறமுடியும். ஆனால் ஏதோ கடமைக்காக அவற்றை செய்தால் அதனால் எந்தப்பயனும் கிடைக்காது.

இறைநம்பிக்கை

இறையச்சத்தில் அடிப்படையில் தான் அல்லாஹ் இந்த ஐந்து கடமைகளை நிர்ணயித்து இருக்கின்றான். முதன் முறையாக ஈமானைப்பற்றிச் சொல்லும் போது ‘ஈமான் கொண்டோர்களே, உங்கள் இறைவனை நீங்கள் அஞ்சிக்கொள்ளுங்கள்’ (திருக்குர்ஆன் 9:119) என்று கூறினான்.

அல்லாஹ் மீது நம்பிக்கை கொண்டால் மட்டும் போதாது, வாழ்க்கையின் ஒவ்வொரு நிலைபாட்டிலும் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ள வேண்டும்.

நீங்கள் எதைச்செய்தாலும், நன்மையை நாடி அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். இறையச்சம் மேலோங்கும் போது எண்ணங்களும் தூய்மை பெற்றுவிடும். பாவத்தை தவிர்த்து வாழ்வதற்கு எளிய வழி பிறக்கும்.

இந்த ஐந்து கடமைகளையும் தவிர வாழ்வியல் வழியில் இறைவன் வகுத்துத் தந்த வழி முறையையும் இறையச்சத்தோடு தான் நிறைவேற்ற வேண்டும்.

தொழுகை

இரண்டாம் கடமையான தொழுகையைப்பற்றிச் சொல்லும் போது, ‘நீங்கள் தொழுகையை செவ்வனே செய்து வாருங்கள். தவறாது அதற்குரிய நேரங்களில் அதனை நிறைவேற்றுங்கள்’ என்று திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

‘நாளெல்லாம் தொழுகையை கடைப்பிடிக்கும்படியும், அவனுக்கே பயப்படும்படியும் ஏவப்பட்டுள்ளோம். அவனிடம் தான் நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்றும் கூறுவீராக!’. (திருக்குர்ஆன் 6:72)

‘நாம் நம்மை படைத்து பரிபாலனம் செய்யக்கூடிய அல்லாஹ்வின் முன் நிற்கிறோம், அவன் சொன்ன கடமையை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம், அவனோடு பேசிக்கொண்டிருக்கிறோம், அவனிடம் நம் கவலையை, தேவையைச் சொல்லிக் கொண்டிருக்கிறோம்’ என்ற இறையச்ச உணர்வோடு தொழுகையை நிறைவேற்ற வேண்டும். அப்போது அல்லாஹ்வால் அது ஏற்றுக் கொள்ளப்பட்டதன் அடையாளமாக நம் உள்ளங்கள் லேசாவதை நாம் உணர முடியும்.

ஆனால் அது எல்லோருக்கும் சாத்தியமாகிவிட முடியாது. ‘இறையச்சமுடையவர்களுக்கே தவிர மற்றவர்களுக்கு அது பெரும் சுமையாகவே தெரியும்’ என்று அல்லாஹ்வே சொல் கிறான்.

இறைவனை வணங்கும் தொழுகையிலும் கூட இறையச்சம் இன்றியமையாதது என்பது இங்கு பட்டவர்த்தமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோன்பு

அடுத்து உண்ணா நோன்பைப் பற்றிச் சொல்லும்போது திருமறை இவ்வாறு கூறுகிறது:

‘நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னுள்ளவர் மீது கடமை யாக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும் நோன்பு நோற்பது கடமை யாக்கப்பட்டுள்ளது. அதனால் நீங்கள் இறையச்சமுடையவர்களாக ஆகலாம்’ (2:183).

‘நோன்பை இறையச்சம் கொண்டு நோற்காமல் வெறுமனே பசித்திருந்தும், தாகித்திருந்தும் அவன் எந்த பயனையும் அடைந்து கொள்வதில்லை. அல்லாஹ்விற்கு அது தேவையும் இல்லை’ என்று விளம்புகிறான்.

தன் தேவைகளைத் தவிர்த்து உடலை வருத்தி செய்யப்படும் நல்ல செயலும் கூட இறையச்சம் என்ற உணர்வு இல்லாததால், அது வீண் செயலாய் போய்விடும் என்ற எச்சரிக்கையும் இங்கே சொல்லப்படுகிறது.

ஜகாத்

நோன்பைத் தொடர்ந்து ஜகாத்தை வலியுறுத்தும் இஸ்லாம் அதற்கான வழிகாட்டுதலையும் சொல்லித்தருகிறது. யாரெல்லாம் ஜகாத் கொடுக்க வேண்டும்? எவ்வளவு கொடுக்க வேண்டும்? எப்படி கொடுக்க வேண்டும்? என்றெல்லாம் வரையறுத்துச் சொல்லுகிறது. மேலும், இறையச்சம் இல்லாமல் வீண் ஆடம்பரத்திற்காகவும், பெருமைக்காகவும், உலகம் புகழ வேண்டும் என்பதற்காகவும் செய்யப்படும் தான, தர்மங்களால் எந்தவித நன்மையும் ஏற்பட வழியே கிடையாது என்றும் அழுத்தமாக தெரிவிக்கிறது.

‘எவர் தொழுதும், ஜகாத் கொடுத்தும் வருகிறாரோ, இவர்கள்தான் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வதில் உண்மையானவர்கள், இவர்கள் தாம் இறையச்சம் உடையவர்கள்’. (திருக்குர்ஆன் 2:177)

வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாமல் செய்யப்படும் தர்மம் தான் தலை சிறந்தது. இதனை அல்லாஹ்விற்காகத் தான் செய்கிறேன் என்று இறையச்சத்தோடு நிறைவேற்றும் போது வாங்கியவரின் கண்ணியமும், கவுரவமும் காப்பாற்றப்படுகிறது. இதனால் மனங்கள் ஒன்றுபடுகின்றது.

ஹஜ்

ஐந்தாம் கடமை ஹஜ்ஜும் கூட உடல், பொருளால் தன்னிறைவு பெற்றவர் களுக்கு மட்டுமே கடமையாக்கப்பட்டுள்ளது. ஹஜ் கடமைகளில் குர்பானி கொடுப்பது மிக முக்கியமான செயல்பாடு.

‘இவ்வாறு குர்பானி செய்த போதிலும் அதன் மாமிசமோ அல்லது அதன் ரத்தமோ அல்லாஹ்வை அடைந்து விடுவது இல்லை. உங்கள் இறையச்சம் தான் அவனை அடையும்’ (22:37) என்று திருக்குர்ஆன் எடுத்தியம்புகிறது.

‘அல்லாஹ் சொன்னான், நான் அடி பணிந்தேன்’ என்று இறையச்சத்தை முன்னிறுத்தி இப்ராஹீம் நபி செயல்பட்டார். அதனால் தான் அல்லாஹ் அவரது செயலை சிறப்பாக்கினான்.

ஈமான், தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் என்ற ஐம்பெரும் கடமைகளை நிறைவேற்றச் சொன்ன அல்லாஹ், அதனை வெறுமனே கடமைக்காக நிறைவேற்றுவதை விரும்புவதில்லை. ‘தக்வா’ என்ற இறையச்சத்தின் அடிப்படையில் அவை நிறைவேற்றப்படும் போது தான் அது முழுமையடைந்து பூரணத்துவம் பெறுகிறது.

இறையச்சத்தோடு வாழ்வோம்; இம்மை, மறுமையின் நன்மை களைப் பெற்றுக்கொள்வோம்.