நம்மில் பலருக்கு காலை உணவைத் தவிர்ப்பது ஒரு பேஷனாகி விட்டது. காலையில் தாமதமாக எழுவது, அடித்துப்பிடித்துக்கொண்டு அலுவலகம் ஓடுவது என பல காரணங்களை இதற்குச் சொன்னாலும் காலை உணவு உண்ணாமல் இருப்பது உடலுக்கு பெருங்கேடு.
காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல், மூளையின் செயல்பாட்டை குறைத்து விடும். இரவு சாப்பிட்டு விட்டு காலையில் தூங்கி எழுவதுவரை நீண்ட நேரம் சாப்பிடாமல் இருக்கிறோம். அடுத்து காலையிலும் பட்டினி கிடந்தால் என்ன ஆகும்? ஆகையால் தான் காலை உணவை தவிர்க்கவே கூடாது.
அதிலும் சர்க்கரை நோயாளிகள் காலையில் குறிப்பிட்ட நேரத்திற்கு சாப்பிட்டு விட்டு மாத்திரைகளையும் விழுங்கி விடவேண்டும். அப்படியானால் தான் ரத்தத்தில் சர்க்கரை கட்டுக்குள் இருக்கும். உணவைத்தவிர்ப்பதால் எதிர்விளைவுகள்தான் ஏற்படும்.
அதேபோல் மதியமும், இரவும் குறிப்பிட்ட நேரத்தில் சாப்பிட பழகிக்கொள்ளவேண்டும். இப்படி சரியான உணவுப் பழக்கத்தை மேற்கொள்பவர்களை நோய் அண்டாது. அதே நேரம் மிக அதிகமாகச் சாப்பிடுவதும் நல்லதல்ல. இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகிவிடும். நிறைய சர்க்கரை சாப்பிடுவதும் ஆரோக்கியக்குறைவே. இது புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது. நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.