ஒரே பதவி – ஒரே ஓய்வூதியத்தை சீரான முறையில் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பலர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரர் ராம் கிஷன் கிரேவால் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
ஓய்வுபெற்ற மற்ற ராணுவ வீரர்களுக்கு சமநீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவை தேர்ந்தெடுத்ததாக அவர் எழுதிவைத்திருந்த தற்கொலை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக டெல்லி ராம் மனோகர் லோகியா ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனிடையே, தற்கொலை செய்து கொண்ட முன்னாள் ராணுவ வீரரின் உடலை காண சென்ற போது டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அம்மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மாநகர ஆர்.கே.புரம் காவல்நிலையத்தில் இருந்து நள்ளிரவு 12 மணியளவில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக இதே காரணத்திற்காக காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல்காந்தியும் கைதாகி விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.