வியட்நாம் நாட்டின் ஹனோய் நகரில் கரோக்கே விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் அந்நாட்டு பிரதமர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதுடன், பாதுகாப்பு விதிமீறல்களுக்கு தண்டனை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
வியட்நாம் நாட்டின் ஹனோய் நகரில் அதிக கூட்டம் நிறைந்த குடியிருப்பு பகுதியில் நேற்று மதியம் தீ பற்றியது. அதன்பின் அந்த தீ உடனடியாக பரவி அருகிலுள்ள 3 வீடுகளையும் சூழ்ந்தது. இதனால் கரும்புகை ஏற்பட்டது. இதனை அடுத்து தீயணைப்பு குழுவினர் 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். அதன்பின்னரே மீட்பு படையினர் பாதிக்கப்பட்டோரை தேடும் பணியில் ஈடுபட முடிந்தது.
இதுபற்றி அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், பிரதமர் இங்குயென் சூவான் புக், விசாரணை மேற்கொள்ள ஹனோய் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளதுடன், அதற்கான காரணத்தினை கண்டறிந்து விதிமீறல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள தவறிய கரோக்கே (பொழுதுபோக்கு விடுதி) மற்றும் உணவு விடுதிகளை மூடும்படி ஹனோய் நகர அரசாங்கத்திடம் புக் கேட்டு கொண்டுள்ளார்.
தேசிய அளவில் பெரிய நகரங்களில் கரோக்கே, டிஸ்கொத்தேக்கள், பார்கள் மற்றும் விடுதிகள் போன்ற பொது இடங்களில் கவனம் செலுத்தி தீ தடுப்பு நடவடிக்கைகள் பற்றி அவசர ஆய்வு மேற்கொள்ள தீயணைப்பு வீரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வியட்நாமில் கரோக்கே தொடர்ந்து பிரபலம் அடைந்து வருகிறது. மக்களில் பலர் பொழுதுபோக்கிற்காக இங்கு செல்கின்றனர். எனினும், இதுபோன்ற இடங்களில் தீ விபத்து போன்ற அவசர காலத்தில் தப்பிப்பதற்காக மேற்கொள்ளப்படும் பயிற்சி முறைகள் மிக குறைவாகவே மேற்கொள்ளப்படுகின்றன. அதிலிருந்து தப்பிக்கும் வழிகளும் ஏற்படுத்தப்படுவதில்லை.