பிரிபடாத ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களும் முஸ்லிம்களும் சுயநிர்ணயத்துடனும்,சுயாதீனத்துடனும் ஆட்சி செய்யும் மாநிலங்கள் வடகிழக்கு ஏற்படுத்த வேண்டும்:ஹஸன் அலி

tamil-a4

கிழக்கு – வடக்கு நிரந்தரமாக இணைய வேண்டுமெனில், முஸ்லிம்களின் சந்தேகம் நீங்க வேண்டும். அதற்கு அவர்களுக்கான அதிகார சம நிலை ஏற்படும் வகையிலான அமைப்பு முறை ஏற்படுத்தப்பட வேண்டும். இதன்கீழ் ஒரு குறிப்பிட்ட காலம் இரு சமூகங்களும் வாழ்ந்த பின்னர் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டு கிழக்கு – வடக்கை இணைக்க முடியுமென முன்னாள் இராஜாங்க அமைச்சர், ஸ்ரீ லங்காமுஸ்லிம் காங்கிறஸ் செயலாளர் நாயகம் ஹஸன் அலி தெரிவித்தார். 

வடக்கு முஸ்லிம் சிவில் அமைப்புக்கள் கடந்த ஞாயிறு கொழும்பில் நடத்திய கருத்தரங்கில் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் வெளியிட்ட கருத்து தொடர்பில் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

தற்பொது தென் கிழக்கு எனச் சொல்லப்படுவது அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசமான பொத்துவில், சம்மான்துறை மற்றும் கல்முனை ஆகிய தேர்தல் தொகுதிகளைக் கொண்ட கரையோர மாவட்டமாகும். இது தேர்தல் மாவட்டமாகவும் நிர்வாக மாவட்டமாகவும் பிரகடணப்படுத்தப்பட்டு அதனை அடித்தளமாகக் கொண்டு கிழக்கு – வடக்கின் சகல மாவட்டங்களிலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களை அடையாளங்கண்டு அவற்றை நிலத்தொடர்பற்ற வகையில் இணைக்கும் ஒரு அமைப்புத்தான் தனி மாகாணமாக வேண்டுமென்பது முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு.

இவ்வாறான அமைப்பு இந்தியாவில் உள்ள பாண்டிச்சேரி மாநிலத்தை ஒத்ததாக இருக்க வேண்டும். இந்த நாட்டில் இன்னொரு இனப்பிரச்சினை வரக்கூடாது என நாம் விரும்புகிறோம். தமிழர்கள் இவ்வளவு காலமாகப் போராட்டம் செய்தார்கள் என்ற காரணத்திற்காக நிபந்தனையற்ற கிழக்கு – வடக்கில் இணைத்து  பாருங்கள் என முஸ்லிம்களை எங்களால் கோர முடியாது. ஏனெனில், இதனை அனுபவத்தினுடாகக் கண்டுள்ளோம். வடக்கு – கிழக்கு முதலமைச்சராக வரதராஜ பெருமாள் இருந்த போதும், பிரபாகரன் இருந்த போதும், முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதைக் கண்டோம். எனவே நிபந்தனையற்ற முறையில் இனையும் கிழக்கு – வடக்கு தொடர்பில் முஸ்லிம்களுக்கு இருக்கும் அச்சம் பிழையானது என யாரும் கூற முடியாது.

நாம் கேட்பதெல்லாம் தமிழருடன் சமாதானமாக வாழ்வதற்கு ஏதுவான ஒரு அதிகார சமநிலை வேண்டும் என்பதையே. இந்த சமநிலையை உறுதிப்படுத்தத்தான் நாங்கள் தனி மாகாண அமைப்பை கேட்கிறோம். தமிழர் பிரச்சினை தீர்க்கப்படும் போது முஸ்லிம் மக்களின் பிரச்சினையும் தீர்க்கப்பட வேண்டும். இது தான் எமது எதிர்பார்ப்பாகும். இப்போது இருக்கும் கிழக்கு மாகாணம் ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் சாதகமானது எனச் சொல்ல முடியாது. 1961 இல் புதிய மாவட்டம் அம்பாரையில் உருவாக்கப்பட்ட பொழுது சிங்கள பெரும்பான்மையினரின் நிலப்பரப்புகள் அயல் மாவட்டங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு புதிய அம்பாரை மாவட்டம் உருவாக்கப்பட்டது. தமிழ் பேசும் மக்கள் தங்கள் பூர்வீக இடங்களில் சிறுபான்மையினராக மாற்றப்பட்டனர். 1988இல் ஜே.ஆர். ஜேயவர்தனவின் 5யில் 6 பெரும்பான்மை அரசு தன்னிச்சையாக புதிய பிரதேச சபை சட்ட மொன்றினை கொண்டு வரும் போது எல்லை நிர்ணய சபை அமைக்கப்பட்டு புதிய பிரதேச எல்லைகள் பெரும்பான்மை சமூகத்துக்கு சாதகமாக வகுக்கப்பட்ட வரலாறும் உள்ளது.

கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்களைப் பொறுத்தவரை, கிழக்கில் புதிய அம்பாரை திருமலை மாவட்டம் உருவாக்கப்பட்ட போது காணிகளை இழந்திருந்தனர். அரச குடியேற்றங்களாலும் அவ்வப்போது நடந்த இனப்பிரச்சினைகள் யுத்தத்தின் போதும் அரச தினைக்களங்களின் தேவையற்ற நெருக்குதல் காரணமாக நிலங்களைப் பறிகொடுத்துள்ளனர். இவ்வாறான சூழலில் தற்போதுள்ள கிழக்கு மாகாணம் முஸ்லிம்களுக்கு சாதகமானது எனச் சிலர் கூறுவதை என்னால் ஏற்க முடியாது. ஏனெனில், முஸ்லிம்களின் விகிதாசாரத்திற்கு ஏற்ப நிலப்பங்கீடு கிழக்கு மாகாணத்தில் புதிதாக முறையாக நடைமுறைப்படுத்தப்பட வில்லை. தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழும் திருமலை, அம்பாரை மாவட்டங்களிருள்ள கச்சேரி நிர்வாகங்கள் பலாத்காரமாக பேரினவாதிகளுக்கு சாதகமான சூழலை கொண்டிருப்பதால் இங்குள்ள காணிப் பிரச்சினை தீர்க்கப்படாது இழுத்தடிக்கப்படுகின்றது. எனவேதான் கிழக்கு – வடக்கு தமிழ் பேசும் இரு சமூகங்கள் தங்களுக்கிடையில் தாங்களே போட்டுக் கொண்டிருக்கின்ற நூல் வேலியை அறுத்து எறிந்துவிட்டு இதய சுத்தியுடன் பேசி சமநிலையை கொண்ட ஒரு தீர்வை முன்வைக்க வேண்டியது அவசியமாகும். இரு சமூகங்களையும் பலப்படுத்தும் செயல் ஒருவருக்கு ஒருவர் போர்புரிய களமமைக்கும் விடயமாக பார்க்கக்கூடாது. எமது மண்ணில் நிரந்தரமாக வாழப் போகின்றோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். கிழக்கு – வடக்கு நிரந்தரமாக இணைய வேண்டுமெனில், முஸ்லிம்களுக்கு அதிகார சமநிலையை கொண்ட அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அந்த அமைப்பின் கீழ் ஒரு குறிப்பிட்ட காலம் வாழ்ந்த பின் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி கிழக்கு, வடக்கு இனைப்பினை மேற்கொள்ள முடியும். இதன் மூலம் முஸ்லிம்களிடமுள்ள சந்தேகம் நீங்க உதவும் என்றார்.