சர்வதேச பொலிஸார் ஊடாக அர்ஜூன் மகேந்திரனை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் – மஹிந்த

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர் நழுவிச் செல்ல இடமளிக்க போவதில்லை என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

தற்போது வெளிநாடு சென்றுள்ள அர்ஜூன் மகேந்திரன் நாடு திரும்பவில்லை என்றால், சர்வதேச பொலிஸார் ஊடாக அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

வலஸ்முல்லை பிரதேசத்தில் வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் அமரவீரவிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதனிடையே இலங்கை மத்திய வங்கியில் தொடர்ந்தும் ஊழல் நடைபெற்று வருவதாக பிரதியமைச்சர் அஜித் பீ. பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார்.

பண்டாரகம பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போது அவர் இதனை கூறியுள்ளார்.

அதேவேளை இலங்கை மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய கோப் குழுவில் அங்கம் வகிக்கும் சில உறுப்பினர்களின் நடவடிக்கைகள் சிக்கலுக்குரியது என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.