மத்திய வங்கியில் இடம்பெற்றுள்ள ஒரு பகல்கொள்ளையே இந்த முறி கொடுக்கல் வாங்கல் : சுனில்

கோப் குழுக் கூட்டத்திலிருந்து தான் எழுந்து சென்றதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் அக்குழுவின் தலைவர் சுனில் ஹதுன்னெத்தி.

மத்திய வங்கியின் பிணைமுறிப் கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான கோப் குழுவின் இறுதி அறிக்கை, நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அறிக்கையை சமர்ப்பித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மத்திய வங்கியில் இடம்பெற்றுள்ள ஒரு பகல்கொள்ளையே இந்த முறி கொடுக்கல் வாங்கல்.

இந்த திருட்டை மறைப்பதற்கு பாராளுமன்றத்தில் சிலர் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.

அறிக்கையில் அடங்கப் பெற்றுள்ள பாரதூரமான அம்சங்களே இது குறித்த இவ்வளவு பரபரப்புக்குக் காரணமாகும்.

இந்த அறிக்கையில் இரு அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. திருடர்களைப் பாதுகாக்கும் பிரிவுசார்ந்தவர்களின் கருத்துக்கள்.

திருட்டை வெளிப்படுத்துபவர்களின் கருத்துக்கள். இதில், திருடர்களை வெளிப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கோப் குழுவிலுள்ள 15 பேர் கையொப்பமிட்டுள்ளனர்.

அத்துடன், திருடர்களைப் பாதுகாக்கும் வகையில் கருத்துக் கொண்டவர்கள் 9 பேர் எதிராக கையொப்பமிட்டுள்ளனர்.

இவர்கள் அரச கணக்காய்வாளர்களின் தகவல்களை மறுக்கின்றனர். அதனை ஒரு சதத்துக்கும் கணக்கில் கொள்ளாது தவிர்க்கின்றனர்.

இதனாலேயே, நான் கோப் குழு கூட்டத்திலிருந்து எழுந்து சென்றுள்ளேன். இந்த அறிக்கை அச்சிடப்பட்ட பின்னர் வாசித்துப் பார்க்கும் பொது மக்களுக்கு இந்த உண்மையை விளங்கிக் கொள்ளலாம் என ஹதுன்னெத்தி எம்.பி குறிப்பிட்டார்.