அமைச்சர் ஹக்கீமிற்கு மிகப் பெரும் சவாலாக உருவெடுத்திருக்கும் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம்!

சாய்ந்தமருதில் ஹக்கீம் vs றிஷாத் 

இலங்கை முஸ்லிம் அரசியல் வரலாற்றில் அம்பாறை மாவட்டம் மிக முக்கியமானது.அம்பாறை மாவட்டம் என்றாலே அது மு.காவின் கோட்டை என்பது தான் அனைவரதும் வாய்களிலிருந்து வரும் வார்த்தைகள்.அம்பாறை மாவட்டத்தில் மு.காவின் உறுதியான அடித்தளத்திற்கு சாய்ந்தமருது மக்களின் பங்களிப்பை யாருமே மறுத்துரைக்க முடியாது.தற்போது அம்பாறை மாவட்டத்தினுள் அ.இ.ம.கா நுழைந்துள்ளது.இதன் நுழைவு மு.காவின் அடித்தளத்தை சற்று அசைத்துப் பார்க்கும் வகையிலும் அமைந்துள்ளது.சாய்ந்தமருது மக்கள் தங்களது தேவையாக சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்றம்,தோனா அபிவிருத்தி ஆகியவற்றையே பிரதானமாக கோருகின்றனர்.இவற்றை அம் மக்கள் சுவைத்துக்கொள்ளாமைக்கான முழுப் பொறுப்பையும் அவர்கள் தங்களது அரசியல் கட்சியாக இது வரை தெரிவு செய்து வைத்துள்ள மு.காவையே சாரும்.

ஆரம்ப காலத்தில் மு.கா சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விடயத்தில் பொடு போக்காகவே செயற்பட்டிருந்தது.இதற்கு மு.காவினுள் இருந்த சில அரசியல் வாதிகள் தடையாகவிருந்ததாக கதைகளும் உள்ளன.ஒரு மு.கா அரசியல் வாதி சாய்ந்தமருது எல்லை பிரச்சினையை அதற்கான பகிரங்க காரணமாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ் கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை வழங்குவதற்கான இறுதி கட்டத்தை நெருங்கியிருந்தார்.இதன் போதும் மு.காவைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்த விடயம் வெளிவந்தது.குறித்த காலப்பகுதி ஜனாதிபதித் தேர்தலில் மு.கா யாரை ஆதரிக்கப்போகிறதென சூடு பிடித்து காணப்பட்ட காலப்பகுதி என்பதால் அவ்விடயம் மிகப் பெரும் பேசு பொருளாக உருவெடுத்திருந்தது.அவர் இதற்கான நியாயமாக கல்முனை பிரிபடுவதை தடுக்கவே அங்கு சென்றதாக கூறியிருந்தார்.இவற்றிலிருந்து சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை பெற்றுக்கொடுக்க மு.காவிற்குள் சில தடைகள் இருந்துள்ளமை தெளிவாகிறது.

அண்மையில் முன்னாள் கல்முனை மாநகர சபை பிரதி மேயர் முழக்கம் மஜீத் சாய்ந்தமருது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை பெற்றுக்கொடுக்க மு.கா முன் வர வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்ததோடு அதற்கு சில நியாயங்களையும் காட்டியிருந்தார்.மு.காவின் உயர் பீடத்தை சேர்ந்த இவர் இது தொடர்பில் மு.காவிடமே கோரிக்கை விடுவது இக் கோரிக்கையில் மு.காவின் கொள்கையை அறிந்து கொள்ளச் செய்கிறது.மு.காவிடம் கோரிக்கை விடும் அறிக்கையில் அதற்கு நியாயம் கற்பிக்கின்றார் என்றால் அதன் பொருள் மு.கா இன்னும் இவ்விடயத்தில் ஒரு தீர்க்கமான முடிவிற்கு வரவில்லை என்பதாகும்.

சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விடயத்தில் மு.கா அக்கறையுடன் செயற்படவில்லை என்பதற்கு சில தற்காலச் சான்றுகளுமுள்ளன.கரு ஜெயசூரிய உள்ளூராட்சி அமைச்சராக இருந்த போது சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை பெற பிரதேச செயலக அனுமதி,கிழக்கு மாகாண சபையின் அனுமதி,கல்முனை மாநகர சபையின் அனுமதி ஆகியவற்றை கோரியிருந்தார்.இதில் பிரதேச செயலக அனுமதி,கிழக்கு மாகாண சபை அனுமதி கிடைக்கப்பெற்றாலும் கல்முனை மாநகர சபையின் அனுமதி கிடைக்கவில்லை.கல்முனை மாநகர சபை மு.காவின் ஆளுகைக்குட்பட்டது.இதனை ஏன் மு.காவால் பெற்றுக்கொடுக்க முடியாது போனது.கிழக்கு மாகாண சபை அனுமதி கிடைக்கப்பெற்றாலும் அது கூட மு.காவின் விருப்பத்துடன் பெற்றுக்கொடுக்கப்படவில்லை.முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெமீலே அவ் அனுமதியை மாகாண சபையில் கோரினார்.இவ் அனுமதிக்கு மு.காவைச் சேர்ந்த யாருமே ஆதரவாக வாக்களிக்கவில்லை.அந் நேரத்தில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் மு.காவில் இருந்தாலும் அமைச்சர் ஹக்கீமிற்கு தெரியாமலேயே  இவ் அனுமதியை கேட்டு கிழக்கு மாகாண சபையில் பிரேரணை சமர்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது விடயத்தில் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்வின் நுழைவையும் விளங்கிக்கொள்ள வேண்டும்.அதாவுல்லாஹ்விடம் குறித்த விடயத்துடன் சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி அமைச்சு இருந்தது.அவர் தான் இவ் அமைச்சை வைத்திருந்த போது இவ்விடயத்தை செய்ய உறுதி பூண்டிருந்தால் அவருக்கு தடை எதுவுமிருந்திருக்காது.அதற்கான பலமும் அவரிடமிருந்தது.இவர் ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் தேர்தல் வெற்றியை கருத்திற் கொண்டே அவசர அவசரமாக இதனை நிறைவேற்றிக்கொடுக்க முயன்றார்.ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் செய்ய முயற்சித்ததன் காரணமாகத் தான் அவ் விடயம் சட்ட ரீதியாக தடுக்கப்பட்டது.அது சட்ட ரீதியாக தடைக்குள்ளானதால் அதனை யாரும் தடுத்ததாக கூட கூற முடியாது.அவரது முயற்சி மஹிந்தவின் முடிவோடு மண்ணிற்குள் புதைந்துவிட்டது.தற்போது உள்ளூராட்சி மன்றம் கிடைக்குமாக இருந்தால் அதற்கும் அதாவுல்லாஹ்விற்கும் எதுவித சம்பந்தமுமில்லை.

ஆரம்ப காலத்தில் மு.கா பொடு போக்காக செயற்பட்டமைக்கு அவர்களுடன் சமமாக நின்று போட்டி போட யாருமில்லாமை பிரதான காரணமாகும்.தற்போது அ.இ.ம.கா போட்டிக்கு வந்துள்ளதால் முன்னர் போன்று மு.கா பொடு போக்காக செயற்பட முடியாது.இவ் உள்ளூராட்சி மன்றத்தை யார் `பெற்றுக்கொடுக்கின்றார்களோ அவர்களின் காட்டில் நல்ல மழை தான்.தற்போது மு.கா இதனை எது செய்தாவது பெற்றுக்கொடுக்க வேண்டும்.கடந்த பாராளுமன்றத் தேர்தல் காலப்பகுதியில் சாய்ந்தமருதில் தனியான உள்ளூராட்சி மன்ற கோசம் மிகவும் தாக்கம் செலுத்தியது.இது அமைச்சர் ஹக்கீமிற்கு மிகப் பெரும் சவாலாகவும் உருவெடுத்திருந்தது.இதன் போது பிரதமர் ரணிலை கூட்டி வந்து சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி மன்றத்தை வாக்குறுதியளித்தே தங்களது செல்வாக்கை நிலை நிறுத்தினர்.

பிரதமரின் வாக்குறுதியை ஒரு போதும் சாதாரணமாக எடை போட முடியாது.இருந்தாலும் ஒரு அரசியல் வாதியின் பண்பையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.ஒரு அரசியல் வாதி ஒரு இடத்திற்கு செல்லும் போது அந்த மக்களின் தேவைகளை அங்குள்ளவர்களிடம் அறிந்து கொண்டு அது சரியோ பிழையோ முதலில் வாக்குறுதியை வழங்குவார்கள்.பின்பு தான் சிந்திப்பார்கள்.பிரதமர் நினைத்தால் இது ஒரு விடயமேயல்ல.அதனை கையில் பெற்றுக்கொள்வதற்கு பிரதமருக்கு பாராளுமன்றத்தில் இது தொடர்பான வினாக்களை எழுப்புதல்,இது தொடர்பில் பிரதமரை தொடர்ச்சியாக சந்தித்தல் போன்ற தொடர்ச்சியான அழுத்தங்கள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.அவ்வாறானவற்றை மு.கா செய்ததாக அறிய முடியவில்லை.எது எப்படி இருப்பினும் பிரதமரின் வாக்குறுதியை சரியான விதத்தில் பயன்படுத்தினால் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை சாய்ந்தமருது மக்கள் சுவைப்பதற்கான இலகுவான வழியாக அமையும்.

மு.கா பிரதமரினூடாக சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை பெற முடியுமென திடகாத்திரமாக நம்பியிருப்பின் உள்ளூராட்சி மன்ற விடயத்திற்கு பைசர் முஸ்தபாவை சந்தித்திருக்க வேண்டிய அவசியமில்லை.பிரதமரினூடாக அழுத்தம் வழங்கியிருக்கலாம்.தற்போது இது விடயத்தில் மு.காவின் நகர்வுகள் அனைத்தும் பைசர் முஸ்தபாவினூடாக பெற்றுக்கொள்வதாகவே உள்ளது.மு.காவினர் அவரை பல தடவைகள் சந்தித்ததாகவும் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை அமைக்க அவர் உறுதியளித்துள்ளார் எனவும் கூறியுள்ளனர்.இப்போது அ.இ.ம.காவினரும் இது தொடர்பில் கரிசனை காட்டுவதால் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் கிடைக்கப்பெறும் போது அதற்கு தந்தை யார் என்ற பிரச்சினை உள்ளது.இதனை யார் செய்தாலும் தான் செய்தேன் எனக் கூறினால் தான் அரசியலும் செய்யலாம். இது சாய்ந்தமருது மக்களின் பிரச்சினை மாத்திரமல்ல.இது தற்போது அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரச்சினைகளில் ஒன்றாகவே நோக்கப்படுகிறது.இது எக் கட்சியினூடாக நிறைவேற்றப்படுகிறதோ ஏனைய கட்சியின் இயலாமை வெளிப்பட்டுவிடும்.

தற்போது இவ்விடயத்தை அ.இ.ம.கா தனது அரசியல் வளர்ச்சிக்காக நன்றாகவே பயன்படுத்த முயற்சிக்கின்றது.அதன் முயற்சிகளில் ஒன்றாக 21-10-2016ம் திகதி வெள்ளி கிழமை உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா சாய்ந்தமருது வருகை தந்திருந்தார்.இவரின் வருகை மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அனைவராலும் நோக்கப்பட்டதோடு அவரது வருகையை  அ.இ.ம.காவும் மிகக் கவனமாக கையாண்டது.குறித்த நிகழ்வில் பைசர் முஸ்தபா கலந்து கொள்ளப் போவதாக அந் நிகழ்வின் ஏற்பாட்டாளரான  ஜெமீலிற்கு கூட அன்று இரவு பதினொரு மணிக்கு பிறகு தான் தெரிந்துள்ளது.குறித்த நாள் அரச வர்த்தக கூட்டுத் தாபனத்தின் கிளை ஒன்று சாய்ந்தமருதில் திறக்கப்படவுள்ளது.அதற்கு அ.இ.ம.காவின் தலைவர் அமைச்சர் றிஷாத் பதியூதீன் வரவுள்ளார் என்றே அனைவரும் அறிந்து வைத்திருந்தனர்.இதனால் இதனை பெரியதொரு பேசு பொருளாக யாருமே கணக்கெடுக்கவில்லை.குறித்த நாள் சுமார் இரண்டு மணியின் பின்னர் தான் பைசர் முஸ்தபா உள்ளடங்கிய பெனர்கள் வெளியாகின.பிரச்சார மேடையும் தயார் செய்யப்பட்டது.இதனைக் கண்ட மு.காவினர் கிலி கொண்டிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.இதனை அறிந்த மு.காவின் முக்கிய புள்ளி ஒன்று இதனை தடுப்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது.குறித்த தடை விடயம் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெமீலின் காதுகளை எட்டிய போது அவருடன் அமைச்சர் பைசர் முஸ்தபா இருந்துள்ளார்.அமைச்சர் பைசர் முஸ்தபா தடுக்க முயற்சித்த குறித்த நபருடன் தொடர்பை ஏற்படுத்தி அத் தடையை இல்லாமல் செய்துள்ளார்.இங்கு மாத்திரமல்ல திருகோணமலையில் ஏற்பாடாகிருந்த அ.இ.ம.காவின் நிகழ்வுகளிலும் பைசர் முஸ்தபா கலந்து கொள்வார் என்றே ஏற்பாட்டாளர்களால் கூறப்பட்டது.ஆனால்,அங்கு அவர் கலந்து கொள்ளவில்லை.இதிலிருந்து ஏதோ ஒரு தடை அவரை தடுத்துள்ளத்தை அறிந்து கொள்ளலாம்.

இந் நிகழ்வுக்கு வந்த பைசர் முஸ்தபா சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விடயத்தில் அமைச்சர் றிஷாதும்,ஜெமீலுமே என்னிடம் அதனை பெற்றுக்கொள்ளும் நோக்கில் வந்தார்கள்.ஏனையவர்கள் போட்டோ பிடிக்கவே வந்தார்களென பகிரங்கமாகவே கூறியிருந்தார்.இங்கு இவ்விடயம் தொடர்பாக அவரிடம் சென்ற சாய்ந்தமருது பள்ளிவாயல் நிருவாகத்தினரும் போட்டோ பிடிக்கவா சென்றார்கள் என்ற வினா சிலரால் எழுப்பப்பட்டது.அவர் அங்கு சுட்டிக் காட்டியது அரசியல் வாதிகளைத் தான் என்பதை சிறு பிள்ளையும் அறிந்துகொள்ளும்.இவ்வாறான வினாக்கள் சிறுபிள்ளைத்தனமானது.அமைச்சர்களான பைசர் முஸ்தபா,றிஷாத் ஆகியோர் நட்பு ரீதியான உறவைக் கொண்டுள்ளவர்கள்.இதனாலேயே இதனைக் கூறினார் என சிலர் கூறுகின்றனர்.மாமன் மச்சான் விளையாட்டு விளையாட பிரச்சார மேடை ஒன்றும் விளையாட்டு மைதானமல்ல.அமைச்சர் றிஷாதை சாய்ந்தமருதில் பலப்படுத்துவதன் மூலம் பைசர் முஸ்தபா தனிப்பட்ட இலாபங்கள் எதனையும் சுவைக்கப்போவதுமில்லை.பைசர் முஸ்தபா சு.காவைச் சேர்ந்தவர்.அமைச்சர் றிஷாத் கடந்த காலங்களில் தனது அரசியல் வாகனத்தை ஐ.தே.கவினூடாக செலுத்துகிறார்.அமைச்சர் றிஷாத் தனியான கட்சியை வைத்திருப்பதால் அமைச்சர் றிஷாதை பலப்படுத்துவது சு.கவிற்கு ஆபத்தானதும் கூட.அமைச்சர் பைசர் முஸ்தபா இவ்வாறான நிலையில் இதனைக் கூறியிருப்பது அவரது உள்ளத்தில் உதித்த ஒன்றாகவே நோக்கலாம்.அமைச்சர் ஹக்கீமை பழி தீர்க்கவே இவ்வாறு செய்தார் என்றால் அவ்வாறானவரிடம் சென்று இவர்கள் ஏதாவது கோரிக்கையை நிறைவேற்றக் கோரினால் அவர் செய்வாரா?

குறித்த நிகழ்வில் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் கிடைக்கப்பெறுமாக இருந்தால் அது அ.இ.ம.காவினூடகவே கிடைக்கும் என்பதை சாய்ந்தமருது மக்கள் ஏற்றுக்கொண்டதை சில விடயங்களிலிருந்து அறிந்துகொள்ள முடிகிறது.சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றத்தை பெற பல வருடங்களாக சாய்ந்தமருது மறு மலர்ச்சி இயக்கம் போராடி வருகிறது.குறித்த நிகழ்வில் அவ் அமைப்பின் செயலாளால் கலீல் உரையாற்றியுமிருந்தார்.சாய்ந்தமருது மறுமலர்ச்சி இயக்கம் யாரைப் பிடித்தாவது இவ்விடயத்தை சாதிக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தனர்.இவர்களின் இம் முடிவானது இதற்குப் பிறகு இதனை அ.இ.ம.காவினூடாகவே சாதிக்கலாம் என்பதை துல்லியமாக வெளிப்படுத்துகிறது.இதற்கு முன்பு இவர்கள் இக் கோரிக்கையை மு.காவினூடாகவே பெறலாம் என்ற வகையில் காய் நகர்த்தியமையை அவர்களது செயற்பாடுகளிலிருந்து அறிந்துகொள்ளலாம்.இது போன்றே அரசியலுக்கு அப்பால் இவ்விடயத்தில் கரிசனை கொண்ட சாய்ந்தமருது பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபையின் தலைவர் ஹனீபா அவர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.இதுவே அவர் அ.இ.ம.காவின் பிரச்சார மேடையில் பங்கு கொண்ட முதல் சர்தர்ப்பெமென அமைச்சர் றிஷாத் மேடையிலேயே சுட்டிக் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.இவ்வளவு நாளும் மேடைக்கு வராத இவர் இந் நிகழ்விற்கு வந்ததன் மூலம் அவர் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற கோரிக்கையை அ.இ.ம.காவினூடாக சாதிக்க முடியும் என நம்புவதை அறிந்துகொள்ளலாம்.இவர் மேடையில் அமைச்சர் றிஷாதிடம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் உடனடியாக ஐம்பது வீடுகளை கட்டித் தர அமைச்சர் றிஷாத் சம்மதம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இவ்விரு அமைப்பினரும் தங்களது கோரிக்கையை சுவைத்துக் கொள்வதற்காக குறித்த பிரச்சார மேடைக்கு வந்திருந்தாலும் அ.இ.ம.காவின் பிரச்சார மேடையில் கலந்து கொள்ளும் போது அவர்களை ஆதரிப்பதாகவும் பொருள் எடுக்கலாம்.

ஒரு தடவை அமைச்சர் றிஷாத் தொழுகைக்காக சாய்ந்தமருது பள்ளிவாயலுக்குள் சென்ற போது அங்கு செல்ல முடியாதவாறு தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.தற்போது சாய்ந்தமருது நம்பிக்கையாளர் சபையின் தலைவரே அ.இ.ம.காவின் பிரச்சார மேடையில் உள்ளார் என்றால் அது சாய்ந்தமருதில் அ.இ.ம.கா வளர்ச்சியடைந்துள்ளது என்பதை அறிந்துகொள்ள போதுமான சான்றாகும்.சாய்ந்தமருது மக்கள் தங்களது நீண்ட நாள் கனவை அடைந்து கொள்வதற்கான இறுதித் தருவாயில் உள்ளனர்.அமைச்சர் றிஷாதும் அடுத்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலிற்குள் சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம் கிடைக்குமென கூறியுள்ளார்.அமைச்சர் ஹக்கீமால் இப்படி காலக்கெடு விதிக்க முடியுமா? அவர் இந் நிகழ்வு சாய்ந்தமருது மக்களிடையே ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்?

 

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் 

சம்மாந்துறை.

குறிப்பு: இக் கட்டுரை இன்று 28-10-2016ம் திகதி வெள்ளி கிழமை நவமணிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.இக் கட்டுரை தொடர்பில் ஏதேனும் விமர்சனங்கள் இருப்பின்  [email protected] எனும் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.இது அச்சு ஊடகத்தில் வெளியிடப்படும் எனது 67 கட்டுரையாகும்.