இனக்குழுமத்தின் பரம்பலை அடிப்படையாக வைத்து எல்லை நிர்ணயங்கள் வகுக்கப்படக்கூடாது இதனை கடுமையாக எதிர்ப்பதாகக் கூறும் ஜாதிக ஹெல உறுமய விருப்புவாக்கு முறைமை முற்றாக ஒழிக்க வேண்டுமென்றும் தெரிவித்தது.
பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் அடுத்த ஆண்டு வரையுள்ளது. எனவே 20ஐ நிறைவேற்றிய பின்னரே பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடத்தப்படவேண்டும் என்றும் ஹெல உறுமய தெரிவித்தது.
பத்தரமுல்லையிலுள்ள ஜாதிக ஹெல உறுமய அலுவலகத்தில் கடந்த இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அதன் ஊடகப் பேச்சாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், ஒரு பிரதேசத்தில் தமிழ், முஸ்லிம், சிங்களம் என வாழும் இனப்பரம்பலை அடிப்படையாக வைத்து தேர்தல் முறைமை மாற்றத்தின்போது எல்லை நிர்ணயங்கள் மேற்கொள்ளப்படக்கூடாது. இதனை நாம் கடுமையாக எதிர்க்கின்றோம்.
நாட்டில் இன்று தமிழ்ப் பிரிவினைவாதம் மட்டுமல்ல. இன மத அடிப்படையில் கிழக்கில் மலையகத்திலும் பிரிவினைகள் உள்ளன. எனவே தனியொரு இனத்தினருக்கோ மதத்தினருக்கோ தேர்தல் முறைமையில் விசேடத்துவம் காட்டக்கூடாது அனைவருக்கும் நீதியானதும் நியாயமானதுமாக இருக்க வேண்டும். ஐ.தே.கட்சி, ஜே.வி.பி., மஹிந்த அணியினர் உட்பட்ட பலர் பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்கிறார்கள்.
ஆனால் பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை உள்ள நிலையிலேயே இவ்வாறு தெரிவிக்கின்றது. ஆனால் உள்ளூராட்சி சபைகளின் ஆட்சிக்காலம் முடிந்துவிட்டது. அவற்றை கலைக்க வேண்டாம் என்கின்றனர்.
இது என்ன நியாயம்?
19 ஆவது திருத்தத்திற்கு அரசியல் கட்சிகள் உட்பட சிவில் அமைப்புக்கள் அனைத்தும் குரல் கொடுத்தன. ஆனால் தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பிலான 20 ஆவது திருத்தம் தொடர்பில் எவரும் குரல் கொடுக்கவில்லை மௌனமாக இருக்கின்றார்கள். நிறைவேற்று அதிகாரத்தின் சிறகுகளை வெட்டுவதற்கு ஆர்வம் காட்டியோர் தேர்தல் முறைமை மாற்றத்தில் அவசரம் காட்டவில்லை.
இது நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலைமையை ஏற்படுத்தும் முயற்சியா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தேர்தல் முறைமை மாற்றப்படும் என உறுதியளித்திருந்தார்.
எனவே அது நிறைவேற்றப்படவேண்டும். விருப்பு வாக்கு முறைமை முற்றாக ஒழிக்கப்படவேண்டும். இன்றைய தேர்தல் முறைமையினால் படித்தவர்கள் பாராளுமன்றம் வரமுடியாது. ஒரு தொகுதியின் மக்களுக்கு பொறுப்புக் கூறுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இல்லை.
தேர்தல் முறைமை மாற்றத்தால் சிறுபான்மை இனக் கட்சிகளுக்குள் அல்லது அவர்களது பாராளுமன்றப் பிரதிநிதித்துவமோ குறையாது. அதேபோன்று சிறிய கட்சிகளுக்கும் அநீதி ஏற்படாது.
20 ஆவது திருத்தத்தை நிறைவேற்றிய பின்னரே பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்றும் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்தார். இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் ஜினவங்ச தேரர் மற்றும் சட்டத்தரணி டியூடர் பெரேரா ஆகியோரும் கலந்து கொண்டனர்.