முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனின் உத்தரவினையும் மீறி புதிய பிரதி அவைத்தலைவர் தெரிவு

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனின் உத்தரவினையும் மீறி 2 மணிநேர கடும் வாக்குவாதங்களுக்கு மத்தியில் புதிய பிரதி அவைத்தலைவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் ம.அன்டனி ஜெயநாதன் கடந்த 1ஆம் திகதி இறைபதமடைந்தமையினைத் தொடர்ந்து புதிய பிரதி அவைத்தலைவராக வ. கமலேஷ்வரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

மதியம் 12 மணிக்கு பிரதி அவைத்தலைவரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நடத்தும் தீர்மானம் எடுக்கப்பட்டு 12.50 மணிக்கு வாக்கெடுப்புக்கான படிவங்கள் விநியோகிக்கப்பட்டது.

இதற்கமைய வாக்களிப்பு இடம்பெற்று இதில் கமலேஷ்வரனுக்கு 18 வாக்குகளும், அனந்தி சசிதரனுக்கு 13 வாக்குகளும் நடுநிலையாக 1 வாக்கும் அளிக்கப்பட்ட நிலையில் வ.கமலேஷ்வரன் புதிய பிரதி அவைத்தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

“நான் வெளிநாட்டிலிருந்து வரும் வரை பிரதி அவைத்தலைவரை தெரிவு செய்யவேண்டாம், நான் வந்த பிறகு தெரிவு செய்கின்றேன்” என்று லண்டனிலிருந்து விக்கினேஸ்வரன் பிரதி முதலமைச்சர் குருகுலராஜாவுக்கு கடிதம் மூலம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.