ஜனாதிபதி பதவிக்கு தகுதியற்றவர் என ஒவ்வொரு நாளும் டிரம்ப் நிரூபிக்கிறார் : ஒபாமா

அமெரிக்காவில் அடுத்த மாதம் (நவம்பர்) 8-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஒபாமாவின் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரியும், குடியரசு கட்சி சார்பில் பிரபல தொழில் அதிபர் டொனால்டு டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர். 

obama
இருவரும் உச்சகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ஹிலாரிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வரும் ஒபாமா, எதிர்க்கட்சி வேட்பாளர் டிரம்ப்பை கடுமையாக சாடி வருகிறார். குறிப்பாக அமெரிக்க அதிபர் ஆவதற்குரிய தகுதி டிரம்ப்புக்கு இல்லை என்று தொடர்ந்து பிரச்சாரம் செய்கிறார்.

அவ்வகையில், லாஸ் வேகாசில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசியபோதும் டிரம்பை தாறுமாறாக விமர்சித்தார். 

ஒபாமா பேசும்போது, ‘அடுத்த 16 நாட்களுக்கு இன்னும் கடினமாக பணியாற்றவில்லை என்றால், நாம் மேற்கொண்ட முன்னேற்றப் பணிகள் அனைத்தும் சென்றுவிடும். ஏனென்றால், தற்போது நான் வகித்து வரும் பதவிக்கான போட்டியிடும் ஒருவர், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வழியிலும் தான் தகுதியற்றவர் என்று நிரூபித்து வருகிறார். 

மறுமுனையில், அதிபர் பதவிக்கு இதுவரை இல்லாத வகையில் தகுதிபடைத்த வேட்பாளரான ஹிலாரி உங்களுக்கு வேட்பாளராக கிடைத்திருக்கிறார்’ என்றார்.

மேலும், குடியரசு கட்சி தலைவர்கள் மற்றும் வலதுசாரி ஊடகங்கள் தன்னைப் பற்றியும் ஹிலாரி குறித்தும் பைத்தியக்காரத் தனமாக விமர்சித்து வருவதாகவும் கூறினார்.