சாயந்தமருதுக்கான உள்ளுராட்சி மன்ற விவகாரம்

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

 

 சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி மன்ற விவகாரம் தொடர்ந்து பேசப்படுகிறதே தவிர, உத்தியோகபூர்வமாக எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை (21) சாய்ந்தமருதுவில் நடைபெற்ற அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் கிளை திறப்பு விழாவில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடன் கலந்து கொண்ட அமைச்சர் பைசர் முஸ்தபா இது தொடர்பில் சில விடயங்களை வெளிப்படையாகவும் நாசூக்காகவும் தெரிவித்திருந்தார்.

சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி மன்ற விடயத்தில் சிலர் உள்ளார்த்தமாகச் செயற்படவில்லை.வெறும் பிரசார உக்தியாகவே இந்த விடயத்தை கையாள்கின்றனர் என்றும் அவர் அங்கு தெரிவித்தார். இந்த விடயத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவரான ஜெமீலுமே நேர்மையான நோக்கத்தில் செயற்படுவதாகவும் அமைச்சர் பைசர் முஸ்தபா பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.

அமைச்சர் பைசர் முஸ்தபாவின் இந்த உரையானது மிக முக்கியத்துவம் பெற்று தற்போது வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளாகி விட்டது. 

rishad rauff hakeem faizer musta

இருப்பினும் இந்த விவகாரத்தை அமைச்சர் பைசர் முஸ்தபா அடக்கி வாசித்திருக்க வேண்டும். பகிரங்கமாக இந்தக் கருத்தை வெளியிட்டதன் ஊடாக மக்கள் மத்தியிலும் அரசியல் மட்டத்திலும் சற்று சலசலப்பு ஏற்படடுள்ளது.

அமைச்சர் ஹக்கீமை சுட்டியே பைசர் முஸ்தபா இவ்வாறு தெரிவித்தமையால் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்களிடையே இந்தக் கருத்து அதிருப்தியைத் தோற்றுவித்துள்ளது. இதன் விளைவுகள் சிலவேளை பாரதூரமாக அமைந்து விடலாம். அது சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி மன்றம் என்ற அந்த ஊர் மக்களின் அபிலாஷையை கானல் நீராக்கி விடுமோ ன்றும் நான் அச்சமடைகிறேன்.

”நந்தவனத்தில் ஓர் ஆண்டி அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக் கொண்டு வந்தானொரு தோண்டி மெத்தக்கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி” என்பது போல் ஆகிவிடுமோ தெரியாது.

இருப்பினும் சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்ற விவகாரத்தில் அமைச்சர் ஹக்கீம் உள்ளார்த்தமாக செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டை நான் முற்றாக நிராகரிக்கிறேன். இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் ஹக்கீமின் முந்தைய நிலைப்பாடு எவ்வாறாக இருந்தாலும் தற்போது அவர் மிகுந்த அக்கறை செலுத்துகிறார். ஆனால், சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி மன்றம் ஒன்று கிடைத்தால் அதற்காக முதலில் பாராட்டப்பட வேண்டிய நபர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் என்பதனை நான் திட்டவட்டமாகக் கூறுவேன். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் நிறையவே உள்ளன.

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் தனக்கு கீழ்வரும் நிறுவனங்களில் தனது கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் தொழில்களை வழங்கவில்லை. தனது அமைச்சரவை சகாக்கள் பலரின் ஆதரவாளர்களுக்கும் வேலைவாய்ப்பைக் கொடுத்துள்ளார்.. இதன்படி அமைச்சர் பைசர் முஸ்தபாவின் ஆதரவாளர்களுக்கும் அவர் உதவியிருக்கவும் கூடும். 

இதன் காரணமாகவே அமைச்சர் ரிஷாத் பதியுதீனை பெரும்பாலான அமைச்சர்கள் விரும்புகின்றனர். மற்றைய அமைச்சர்களின் கோரிக்கைகளை செவிமடுத்து மறுப்பின்றி உதவி செய்வதே இதற்கு காரணம் என நான் திட்டவட்டமாகக் கூறுவேன். 

இதேவேளை, இதனையே ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி அமைச்சர் ரிஷாத் தனது சமூகம் சார்ந்த தேவைகளை ஏனைய அமைச்சர்கள் ஊடாக இலகுவில் செய்து கொள்ளக் கூடியதாக உள்ளது. அதாவது ஐந்தை கொடுத்து விட்டு பத்து நல்ல காரியங்களை மற்றவர்களிடமிருந்து பெற்றுக் கொள்வதில் அமைச்சர் ரிஷாத் மிகப் பெரிய கெட்டிக்காரர். 

ஆனால், இந்தத் தன்மை கொண்டவராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் காணப்படவில்லை இதன் காரணமாக பல அமைச்சர்களின் அதிருப்தியை ஹக்கீம் சம்பாதித்துக் கொண்டுள்ளார். இதனை நான் ஆதாரத்துடன் நிரூபிப்பேன்.

மேலும் அரச வர்த்தக கூடடுத்தாபனத்தின் தலைவரான நண்பர் ஜெமீலையும் நான் சின்னப் பொடியனாக கணிக்கமாட்டேன். காரணம் அவரும் பல அமைச்சர்கள்,பிரதானிகளுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளார். கடுகு சிறிதானாலும் காரம் பெரிதாகவே அவரைக் கருதுவேன். கடந்த காலத்தில் சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளுராட்சி மன்றம் தொடர்பில் அவரும் வேறு நிலைப்பாட்டைக் கொண்டவராக இருந்தார் என நான் கணிப்பிட்டிருந்தாலும் இன்று அவரிடம் இந்த விடயத்தில் நிறையவே மாற்றம் காணப்படுகிறது. அமைச்சர் பைசர் முஸ்தபா உட்பட பல அமைச்சர்களின் தற்போதைய செல்லப்பிள்ளை என என்னால் சித்திரிக்கப்படும் ஜெமீல், அமைச்சர் பைசர் முஸ்தபாவின் அமைச்சுக்கு அடிக்கடி சென்று சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி மன்ற விடயத்தில் தொல்லை கொடுப்பதாக எனக்கு நிறையவே தகவல்கள் கிடைத்துள்ளன.