இலங்கையில் இனங்களுக்கிடையில் புரிந்துணர்வை வலுப்படுத்த சவூதி தூதுக்குழுவுடன் ஹிஸ்புல்லாஹ் விசேட கலந்துரையாடல்!

20161024_145205_fotor
இலங்கையில் இனங்களுக்கிடையில் புரிந்துணர்வையும் – ஒற்றுமையையும் வலுப்படுத்துவதற்கு, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீலங்கா ஹிரா பௌண்டேஷன் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வுடன், சவூதி அரேபியாவின் ‘இனங்களுக்கும் – நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை பலப்படுத்தும் நிறுவனத்தின்’ தலைவர் டாக்டர் வாசிப் ஏ.எவ்.காப்லி தலைமையிலான தூதுக் குழு இன்று விசேட பேச்சுக்களில் ஈடுபட்டது. 
இன்று திங்கட்கிழமை மாலை இராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது. 
இலங்கையில் பெரும்பான்மையாக வாழ்கின்ற பௌத்த மக்களுக்கும் – முஸ்லிம்கள் மற்றும் ஏனைய சிறுபான்மை சமூகங்களுக்குமிடையில்; ஒற்றுமையை ஏற்படுத்தி அவர்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்துவது தொடர்பாக இதன் போது ஆராயப்பட்டுள்ளது.
இலங்கையில் இனங்களுக்கிடையில்  சந்தேகங்களை கலைந்து ஒற்றுமை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளும் இத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளன. விசேடமாக இஸ்லாம் தொடர்பில் பிறமதத்தவர்கள் மத்தியிலுள்ள சந்தேகங்களை நீக்கி நிலையான ஒற்றுமையை ஏற்படுத்துவது தொடர்பாகவும் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. 
அத்துடன், பௌத்த மதத் தலைவர்களுக்கும் – முஸ்லிம் கல்விமான்களுக்கும் இடையிலான   பேச்சுக்கள் – பயிற்ச்சி வகுப்புக்கள் மூலமாகவும் இத்திட்டத்தை முன்னெடுத்து செல்வது  எவ்வாறு என்பது தொடர்பிலும் இதன் போது  ஆராயப்பட்டது. 
“இந்த இருதரப்பு பேச்சு எதிர்காலத்தில்  இலங்கையில் இனங்களுக்கிடையிலான உறவினை கட்டியெழுப்புவதில் பெரும் பங்காற்றும்” என இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நம்பிக்கை தெரிவித்தார். 
இக்கலந்துரையாடலில் இன நல்லுறவு தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் தலைவர் அஷ்ஷேய்க் அப்துல் காதர் மசூர் மௌலானா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.