பாடசாலையில் நிலவும் ஒழுக்கச் சீர்கேடுகளே சமூகப் பிரச்சினைகளுக்கு அத்திவாரம்:வவுனியாவில் றிசாத்!

 

பாடசாலைகளில் நிலவுகின்ற ஒழுக்கச் சீர்கேடுகளே சமூகத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு மூலகாரணமாக அமைவதாகவும் அதிபர்களும், ஆசிரியர் குலாமும் இந்த விடயங்களில் கவனஞ்செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

வவுனியா, நேரியகுளம், மாங்குளம், அல்/ஹாமியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் “அருகிலுள்ள நல்ல பாடசாலை”  திட்டத்தின் கீழ் அமைச்சரின் முயற்சியினால் உள்வாங்கப்பட்டுள்ள நவீன தொழில்நுட்ப ஆய்வு கூடத்துக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதம விருந்தினராக அமைச்சர் இன்று (24/10/2016) கலந்துகொண்டார்.

14797371_664708630361852_1387599120_n_fotor

இந்நிகழ்வில் கெளரவ அதிதிகளாக வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான், வலயக் கல்விப் பணிப்பாளர் இராதாகிருஷ்ணன், அமைச்சரின் இணைப்புச் செயலாளர் எம்.ஐ.முத்து முஹம்மத் ஆகியோர் பங்கேற்றனர். 

பாடசாலை அதிபர் எம்.ஆர்.ஏ.சலீம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் உரையாற்றியதாவது,

அதிபர்களும், ஆசிரியர்களும் அரசியல்வாதிகளின் பின்னால் அலைந்து திரிந்து அதிகாரிகளை அச்சுறுத்துவதும், அதிகாரிகளை தம் கைக்குள் போட்டு வளைத்துப் பிடிப்பதுமான பிழையான கலாசாரம் நம் மத்தியிலிருந்து நீங்க வேண்டும். பாடசாலை நிருவாகத்தை மிகச்சரியாக நேர்மையான முறையில் முன்னெடுப்பதன் மூலமே கல்வியில் முன்னேற்றங்காண முடியும்.

14798970_664708497028532_1325769595_n_fotor

அரசியல்வாதிகள் பாடசாலைகளுக்கான வளங்களப் பெற்றுக் கொடுப்பார்கள். அதிகாரிகளும், பாடசாலை நிருவாகமும் அதனைச் செம்மையான முறையில் பயன்படுத்தப் பழக வேண்டும்.

“மஹிந்தோதய” திட்டத்தின் கீழ் நான் கடந்த காலங்களில் வவுனியா மாவட்டத்திலுள்ள பல பாடசாலைகளுக்கு உதவியிருக்கின்றேன். தமிழ், சிங்கள, முஸ்லிம் என்ற பேதமின்றி அந்தப் பாடசாலைகளை முன்னேற்றுவதில் நான் பாடுபட்டிருக்கின்றேன். அதேபோன்று நல்லாட்சி அரசாங்கத்தில் பாடசாலைகளை முன்னேற்றும் புதிய திட்டங்களிலும் வவுனியா மாவட்டப் பாடசாலைகள் உள்வாங்கப்பட்டுள்ளன. 

இந்தப் பிரதேசத்தில் வாழும் முஸ்லிம்களுக்கு பரம்பரை பரம்பரையாக, பன்னூற்றுக்கணக்கான ஏக்கர்கள் விஸ்தீரணம் கொண்ட காணிகள் கிடக்கின்றன. எனினும், நமது மூதாதையர்களும், நாமும் நமக்குச் சொந்தமான காணிகளுக்கு முறையான உறுதிகளைப் பெற்றுக்கொள்வதில் பொடுபோக்காக இருந்ததினால் காணிகள் பறிபோகும் நிலையில் இருக்கின்றது. 

பலருடைய காணிகள் பறிபோயும் விட்டன. மாவட்ட அபிவிருத்திச் சபையில் எதிர்வரும் காலங்களில் காணிகளை இழந்தவர்களுக்கு மாற்றீட்டுக் காணியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என தெரிவிக்கின்றேன். இவ்வாறு அமைச்சர் கூறினார். 

14800999_664708367028545_1034452661_n_fotor

இந்தப் பாடசாலையின் குடிநீர்ப் பற்றாக்குறையைத் தீர்க்க விரைவில் நீர்த்தாங்கிகளைப் பெற்றுக்கொடுப்பதாகவும், அடுத்த வரவுசெலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டில் இரண்டு மாடிக் கட்டிடம் ஒன்றை பெற்றுக் கொடுப்பதாகவும் அமைச்சர் உறுதியளித்தார்.    

ஊடகப்பிரிவு