கோலி, டோனியின் அபார ஆட்டத்தால் நியூசிலாந்தை வெற்றி கொண்ட இந்தியா

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று மொகாலியில் பகல் – இரவு போட்டியாக நடைபெற்றது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் டோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். நியூசிலாந்து அணி இந்த தொடரில் 7-வது முறையாக ‘டாஸ்’ தோற்றது. இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. நியூசிலாந்து அணியில் ஒரே ஒரு மாற்றம் இருந்தது. டேவிச்சுக்கு பதிலாக நீசம் சேர்க்கப்பட்டார்.

kohli_650_022314022622
லாதம் (61), நீசம் (57), டெய்லர் (44) மற்றும் ஹென்றி (39 அவுட் இல்லை) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 49.4 ஓவரில் 285 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. இதனால் இந்தியாவிற்கு 286 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

286 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் ரோகித் சர்மா, ரகானே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ரோகித் சர்மா 13 ரன்கள் எடுத்த நிலையிலும், ரகானே 5 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டம் இழந்தனர்.

அடுத்து 3-வது விக்கெட்டுக்கு கோலியுடன் கேப்டன் டோனி ஜோடி சேர்ந்தார். கோலி 6 ரன்கள் எடுத்த நிலையில் ஹென்றி பந்தில் ஸ்லிப் திசையில் நின்ற டெய்லரிடம் கேட்ச் கொடுத்தார். எளிதான கேட்சை டெய்லர் தவறவிட்டதால் கோலி 6 ரன்னில் அவுட்டாகும் பெரிய கண்டத்தில் இருந்து தப்பினார். (இந்த கேட்சை மிஸ்சிங் செய்ததற்கு நியூசிலாந்து அணி பின்னர் பெரிய விலை கொடுக்க வேண்டியிருந்தது.)

இந்த ஜோடி நியூசிலாந்தின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டனர். இருவரும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு ரன்கள் எடுத்தனர். இதனால் இந்தியாவின் ஸ்கோர் தொய்வின்றி உயர்ந்தது. இருவரும் அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர்.

இந்தியாவின் ஸ்கோர் 35.5 ஓவரில் 192 ரன்கள் இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. 91 பந்தில் 80 ரன்கள் குவித்த டோனி ஹென்றி பந்தில் ஆட்டம் இழந்தார். கோலி – டோனி ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 151 ரன்கள் குவித்தது.

டோனி அவுட்டாகும்போது இந்திய அணியின் வெற்றிக்கு 85 பந்தில் 94 ரன்கள் தேவைப்பட்டது. 4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் மணீஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். 41-வது ஓவரின் முதல் பந்தில் ஒரு ரன் எடுத்ததன் மூலம் கோலி சதத்தை பூர்த்தி செய்தார். இது ஒருநாள் கிரிக்கெட்டில் கோலியின் 26-வது சதம் ஆகும்.

இந்த ஜோடியும் சிறப்பாக விளையாடி பார்ட்னர்ஷிப் 50 ரன்களைத் தாண்டியது. இருவரும் பந்துக்கு பந்து ரன்கள் எடுத்துக் கொண்டு வந்தனர். இதனால் பந்தைவிட ரன்கள் அதிக அளவில் இருந்தது. 45 ஓவர்கள் முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 30 பந்தில் 35 ரன்கள் தேவைப்பட்டது. அடுத்த இரண்டு ஓவர்களில் 12 பந்தில் 12 ரன்கள் எடுத்தனர்.

இதனால் கடைசி 3 ஓவரில் 23 ரன்கள் தேவைப்பட்டது. 48-வது ஓவரை போல்ட் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய விராட் கோலி 2-வது பந்தில் இரண்டு ரன்கள் அடித்தார். 3-வது பந்தை பவுண்டரிக்கு விரட்ட, 4-வது பந்தில் இமாலய சிக்சர் ஒன்று விளாசினார். அடுத்த பந்தில் 2 ரன்கள் எடுத்து 150 ரன்னைத் தொட்டார். கடைசி பந்தை பவுண்டரிக் தூக்கி ஒரு ஓவரிலேயே 22 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடியும் நிலைக்கு கொண்டு வந்தார்.

அடுத்த ஓவரின் 2-வது பந்தில் மணீஷ் பாண்டே பவுண்டரி அடித்து இந்திய அணியை வெற்றி பெற வைத்தார். இதனால் 48.2 ஓவரில் 3 விக்கெட்டு இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விராட் கோலி 154 ரன்னுடனும், மணீஷ் பாண்டே 24 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நியூசிலாந்து அணி சார்பில் ஹென்றி 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 2-1 என முன்னிலையில் உள்ளது. 4-வது போட்டி 26-ந்தேதி ராஞ்சியில் நடைபெறுகிறது.