எமது இழந்த உறவுகளை நினைவுகூருவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. தமிழ் மக்களாகிய நாமே அதன் வலிகளை உணர்ந்தவர்கள். அதனை எவரும் தடுத்து நிறுத்திவிடமுடியாது என தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இவ்விடயத்தை மீண்டும் மீண்டும் சர்ச்சையாக்குவதை நிறுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இன்றைய தினம் இறுதி யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூருவது தொடர்பாக நீதிமன்ற தடை உட்பட பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இந்த நாட்டிலுள்ள தமிழ், முஸ்லிம், சிங்களவர்கள் என அனைத்து மக்களுக்கும் தங்களுடைய துக்கத்தை அனுஷ்டிப்பதற்கு உரிமை உள்ளது. அதற்கான பூரண சுதந்திரம் வழங்கப்படவேண்டும்.
விசேடமாக வடக்கு கிழக்கைச் சேர்ந்த எமது மக்கள் அசாதாரண காலத்தில் கண்ட இழப்புக்கள் ஏராளம். அவர்களே இழப்பின் வலியை அதிகம் உணர்ந்தவர்கள். தமது உறவுகளின் இறப்பை நினைவுகூரும் அவர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கப்படவேண்டும். அதனை தடுப்பதற்கு எவருக்கும் அதிகாரமில்லை.
கடந்த வருடம் இதே நாளில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நினைவேந்தல் நிகழ்வை மேற்கொண்டபோது பல்கலைக்கழகத்தினுள் அத்துமீறில் நுழைந்து அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அது மிகவும் தவறான விடயம் என்பதை நான் பராளுமன்றில் சுட்டிக்காட்டியிருந்தேன்.
இந்நிலையில் தற்போது மாறுபட்டதோற்றப்பாட்டை காண்பித்து உறவுகளுக்காக அஞ்சலிசெய்வதை தட
க்க முனைகின்றார்கள். அச்செயற்பாடுகளை நிறுத்தப்பட்டு இழந்தவர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செய்வதற்கு சகலரும் உரித்துடையவர்கள் என்பதை உணர்ந்தும் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தும் சுந்திரமாக அக் கருமத்தைமேற்கொள்வதற்கு இடமளிக்கவேண்டும்.
அதேநேரம் வடக்கு கிழக்கு வாழ்தமிழ் மக்களும் வேண்டாத சர்ச்சைகளை ஏற்படுத்தும் வகையிலான கருமங்களை கைவிட்டு அமைதியான முறையில் தமது அஞ்சலி செய்யும் கருமங்களை மேற்கொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
சுரேஷ்பிரேமசந்திரன் எம்.பி
இவ்விடயம் குறித்து கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி கருத்து தெரிவிக்கையில்,
மரணித்த எமது உறவுகளுக்காக அஞ்சலி செய்வதற்கு அல்லது ஒரு விநாடியேனும் நினைவுகூருவதற்கு கடந்த காலத்தில் நாம் எத்தனையோ கோரிக்கைகளை விடுத்தபோதும் அவை அனைத்திற்கும் இடமளிக்காது அப்போதைய அரசாங்கம் இரும்புக்கரம் கொண்டு இராணுவ இயந்திரத்தை பயன்படுத்தி தடுத்துவந்தது.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஜனநாயக முறையிலான ஆட்சி முன்னெடுக்கப்படுவதாக உலக நாடுகளிடமும் எம்மிடமும் குறிப்பிடப்படுகின்றது. அதன் அடிப்படையில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூருவதற்கு அனுமதியும் அரசாங்கத்தால் வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும் நீதித்துறை அதற்கு தடையுத்தரவு பிறப்பித்திருக்கின்றது.
ஒருபக்கம் அனுமதி வழங்கிய அரசாங்கம் மறுபக்கத்தில் பொலிஸ், நிதித்துறை சுயாதீனமாகச் செயற்படுவதாக கூறி அதனை பயன்படுத்தி எமது உறவுகளை நினைவு கூருவதை தடுத்து வருகின்றது. இது எந்தவகையில் நியாயமானதாகும்.
உயிரிழந்த ஒவ்வொரு உறவையும் நினைவுகோருவது எமது அனைவரினதும் தலையாக கடமை. அசாதாரண காலத்தில் எத்தனையோ இழப்புக்களை நேரடியாக கண்டு அதன் வலிகளை உணர்ந்தவர்கள் நாங்கள். அவ்வாறிருக்கையில் எமது மக்களை நினைவுகூருவதை தடுப்பதென்பது மிகமிக கண்டிக்கத்தகதொன்றாகும்.
மேலும் இந்த நாட்டில் மரணித்த ஒருவரை நினைவு கூருவதற்கு கூட அனுமதி மறுக்கப்படுகின்றதென்பது அடிப்படை உரிமையே மறுப்பதற்கு சமமானதாகவே உள்ளது. அதன் பின்னர் இங்கு ஜனநாயகம் நிலைபெற்றிருக்கின்றது என எவ்வாறு கூற முடியும்.
எமது மக்களின் அடிப்படை உரிமைகளை அரசாங்கம் மதிக்க வேண்டும். அதனை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும். அவர்கள் தமது இறந்த உறவுகளுக்காக அஞ்சலி செய்வதற்காகவாது சுதந்திரம் வழங்கப்படவேண்டும்.
அதேநேரம் இவ்வாறு தடுக்கும்செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதென்பது தமிழ் மக்களை அரசாங்கத்திலிருந்து வெகுதூரத்திற்கு விலக்கிச் செல்லுவதற்கான பாதையை ஏற்படுத்தி விடும் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும் என்றார்.