அல் அக்ஸா முஸ்லிம்களுக்கே சொந்தமானது. இஸ்ரேலுக்கு சொந்தமானதல்ல என்ற யுனெஸ்கோவின் பிரேரணையை ஆதரித்து இலங்கை வாக்களிக்காமைக்கு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்டு அரசாங்கத்துக்கு மகஜரொன்றினைக் கையளித்து முஸ்லிம் சமூகத்தின் ஆதங்கத்தை வெளிப்படுத்த வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான எம்.ரி.ஹசன்அலி தெரிவித்துள்ளார்.
அல் அக்ஸா பள்ளிவாசல் தொடர்பான முஸ்லிம்களுக்கு ஆதரவான யுனெஸ்கோவின் பிரேரணைக்கு இலங்கை அரசாங்கம் வாக்களிக்காது நடுநிலைமை வகித்தமை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
அல்அக்ஸா விடயத்தை சர்வதேச அரசியலோடு தொடர்புபடுத்திப் பார்க்கக் கூடாது. இவ்விவகாரம் சர்வதேச அரசியலுக்கு அப்பாற்பட்டதாகும். அல்அக்ஸா முஸ்லிம்களின் முதலாவது கிப்லாவாகும்.
குர்ஆனில் இது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அல்அக்ஸா விவகாரம் சர்வதேச சாயம் பூசக்கூடியதல்ல. அல்அக்ஸா விவகாரத்தில் யுனெஸ்கோவின் பிரேரணைக்கு அரசாங்கம் வாக்களிக்காமை முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தியுள்ளது.
நல்லாட்சி அரசாங்கம் அமைவதற்கு இந்நாட்டு முஸ்லிம்கள் காத்திரமான பங்களிப்பு வழங்கியிருக்கிறார்கள். இந்த அரசின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அரசாங்கம் முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தியிருக்கக்கூடாது.
என்றாலும் நடந்தது நடந்து முடிந்துவிட்டது. இதன்பிறகு என்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் எனத் திட்டமிடவேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா பாராளுமன்றத்தில் இது தொடர்பாக தனிநபர் பிரேரணையொன்றினைக் கொண்டுவரத் தீர்மானித்திருப்பது வரவேற்கத்தக்கது.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்விவகாரத்தில் மௌனம் சாதிக்காது அனைவரும் கையொப்பமிட்டு மகஜர் ஒன்றினைச் சமர்ப்பித்து தங்களது எதிர்ப்பினைத் தெரிவிக்க வேண்டும் எனக்குறிப்பிட்டுள்ளார்.