“உமக்குக் கட்டளையிடப்பட்டிருப்பதை வெளிப்படையாக அவர்களுக்கு அறிவிப்பீராக; இணைவைத்து வணங்குபவர்களைப் புறக்கணித்துவிடுவீராக!” என்ற இறை வசனம் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டபோது அவர்கள் மிகத் தைரியமாக நிராகரிப்பவர்களின் முன்பு வந்து நின்று “என் கூட்டத்தாரே! அல்லாஹ்வையே வணங்குங்கள், உங்களுக்கு அவனன்றி வேறு நாயனில்லை; உங்களுக்கு வர இருக்கும் மகத்தான ஒரு நாளின் வேதனையைப்பற்றி நான் அஞ்சுகிறேன்” என்று நூஹ் நபி தம் மக்களுக்குச் சொன்னதை, கஅபாவின் முன் வந்து நின்று நபிகள் நாயகம் (ஸல்) தம் மக்களுக்கு எடுத்துரைத்தோடு, அங்கேயே நின்று அல்லாஹ்வை வழிபடத் தொடங்கினார்கள்.
அப்போதெல்லாம் கஅபாவினுள் பலதரப்பட்ட சிலைகள் இருக்கும். அதனை வணங்குவதற்காகத் தூர தேசத்திலிருந்தெல்லாம் மக்கள் பயணம் செய்து வருவார்கள். அதன் காரணமாக மக்காவாசிகளுக்கு வியாபாரம் சிறப்பாக இருக்கும். ஹஜ்ஜின் காலம் நெருங்க நெருங்க குறைஷிகளுக்குக் கவலை அதிகரித்தது.
ஏனெனில் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் இறை அழைப்பினால் மற்ற இடத்திலிருந்து கஅபாவிற்கு வரும் அரபிகள் மனம் மாறிவிட்டால் தங்களுக்கான வருமானம் நின்றுவிடுமென்று அஞ்சினார்கள். வலீத் இப்னு முகீரா என்பவரின் தலைமையில் எல்லோரும் கூடி குர்ஆனுக்கு எதிராகச் சிந்திக்கத் தொடங்கினர். குர்ஆன் பற்றிக் குறைகூற இயலாமல் கடுகடுத்தனர். அதன் எதிர்ப்பாளர்கள் ஒருமனதாக நபிகள் நாயகம் (ஸல்) ஒரு சூனியக்காரர் என்று பரப்பத் தொடங்கினர். சிலர் நபிகளாரை பொய்யர் என்றும் தூற்றினர்.
“நாம் உமக்கு முன்னால் முந்திய பல கூட்டத்தாருக்கும் தூதர்களை அனுப்பிவைத்தோம். எனினும் நம்முடைய எந்தத் தூதர் வந்தாலும் அவரை அந்த மக்கள் ஏளனம் செய்யாமல் இருந்ததில்லை” என்ற அல்லாஹ்விடமிருந்து இறைவசனங்கள் வந்தபோது, முஹம்மது நபி (ஸல்) ஆறுதல் பெற்றார்கள்.
இறைமறுப்பாளர்கள் தம்மைத் தூற்றுவதையெல்லாம் பொருட்படுத்தாமல் தமது இறை அழைப்பை தீவிரப்படுத்தினார்கள். ஹஜ்வாசிகளிடமும் இஸ்லாம் அழைப்பை முற்படுத்தி நல்லுபதேசங்கள் செய்தபோது, நிராகரிப்பவர்கள் கோபத்துடன் நபிகளாரை முறைத்தார்கள். ஏழை எளியவர்கள் இஸ்லாத்தை ஏற்றபோது “இவர்கள் மீதா அல்லாஹ் அருள் புரிந்துவிட்டான்?” என்று நபிகளாரை கேலி செய்தார்கள்.
அப்போது “குற்றமிழைத்தவர்கள், இறைநம்பிக்கை கொண்டவர்களைப் பார்த்து சிரிக்கிறார்கள். அவர்கள் அண்மையில் சென்றால், ஏளனமாக ஒருவருக்கொருவர் கண்சாடை செய்துகொண்டு தாங்கள் செய்தது சரியென்பதுபோல் மகிழ்வுடன் செல்கிறார்கள். முஸ்லிம்களைப் பார்த்தால் ‘நிச்சயமாக இவர்களே வழி தவறியவர்கள்’ என்றும் கூறுவார்கள்.
முஸ்லிம்களின் பாதுகாவலர்களாக அந்த நிராகரிப்பாளர்கள் அனுப்பப்படவில்லையே!” என்ற இறைவசனம் வந்தது. இப்படிச் சூழலுக்கேற்ப இறைவசனங்கள் வரும்போதெல்லாம் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து முஹம்மது (ஸல்) அவர்களை இறைத்தூதராக ஏற்று மனம்மாறி இஸ்லாமிற்குச் சிலர் திரும்பினாலும் பலர் நிராகரிப்பாளர்களாகவே இருந்தனர்.
திருக்குர்ஆன் 15:94, 7:59, 74:18-25, 15:6, 15:10-11, 6:10, 68:51, 6:53, 83:29-33.