ஐ.நா.பிரதிநிதி கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களை மாத்திரம் சந்தித்திருப்பது மனவேதனை : யோகேஸ்வரன்

ஐக்கிய நாடுகள் சபையில் இருந்து அண்மையில் வருகைதந்த சிறுபான்மை சமூகங்களின் அறிக்கையிடும் பிரதிநிதி கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களை மாத்திரம் சந்தித்திருப்பது மனவேதனை அளிக்கின்றது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

yogeswaran-s-575-01-e1467015534550_fotor

சித்தாண்டிப் பிரதேசத்தில் காலாசார மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, புதன்கிழமை (19) நடைபெற்றது. இங்கு கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

புதிதாக உருவாக்கப்படும் அரசியலமைப்பில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கவேண்டும் என்பதில் எமது தலைவர் இரா.சம்பந்தன் உறுதியாக உள்ளதுடன், இது தொடர்பான முயற்சிகளையும் அவர் மேற்கொண்டு வருகிறார். 

அந்த முயற்சிகளில் பலாபலன் விரைவாகக் கிடைக்கவேண்டும் என்பதே எமது அவாவாகவுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தால் அரசியல் தீர்வுக்கான முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டாலும், அவை இழுபறி நிலையில் சென்றுகொண்டிருப்பதை நாம் அவதானிக்கிறோம். 

எமக்கு நியாயமான அரசியல் தீர்வு கிடைக்காவிடின், இந்த அரசாங்கம் தொடர்ந்து இயங்காதாவாறு அஹிம்சை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எமது தலைவர் கூறியுள்ளார்’ என தெரிவித்துள்ளார்.

‘அரசாங்கமானது, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை மாற்றியமைத்து வேறொரு விதமாக முடக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்கின்றது. 

பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கு மாற்றீடாக கொண்டுவரப் போகும் சட்டமூலம், எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்குப் பெரும் பாதிப்பை விளைவிக்கக்கூடியதாக இருந்தால், அதை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரும்போது, அதற்கு நாம் முழுமையான எதிர்ப்பை வெளியிடுவோம்.

நல்லாட்சி அரசாங்கம் என்று கூறுவதால், தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் அரசாங்கத்தின் பல விடயங்களுக்கு நாங்கள் ஆதரவு வழங்கியுள்ளோம். 

இந்த அரசாங்கம் மேலும் சட்டங்களைக் கொண்டுவந்து, எமது மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்குத் தடையாக இருக்குமாயின், அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்படவேண்டிய சூழ்நிலை ஏற்படும்’ எனவும் அவர் கூறியுள்ளார்.