குண்டு துளைக்காத வாகனங்களை தேங்காய் சிரட்டைகளைப் போன்று வீடுகளில் மறைத்து வைக்க முடியாது அல்லவா?

file image

சுயாதீன ஆணைக்குழுக்கள் தொடர்பில் பிந்தியேனும் ஜனாதிபதிக்கு உண்மை விளங்கியமை மகிழ்ச்சி அளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நிக்கவரெட்டிய பிரதேசத்தில் சுதந்திரக் கட்சியின் முன்னாள் தொகுதி அமைப்பாளர் ஒருவரின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்றதன் பின்னர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், சுயாதீனமானது எனக் கூறப்பட்ட ஆணைக்குழுக்கள் மற்றும் அதன் அதிகாரிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என நாட்டின் ஜனாதிபதி கூறுகின்றார்.

இதனையே நாம் ஆரம்பம் முதல் கூறி வருகின்றோம். பிந்தியேனும் ஜனாதிபதி உண்மையை ஒப்புக்கொண்டமை மகிழ்ச்சி அளிக்கின்றது. அரசாங்கம் தற்போது எதிர்க்கட்சியின் உறுப்பினர்களை கைது செய்து வருகின்றது. நிறுவனங்களுக்கு அழைக்கின்றது.

புதிய விளையாட்டாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் குண்டு துளைக்காத வாகனம் உண்டா என தேடத்தொடங்கியுள்ளது.

குண்டு துளைக்காத வாகனங்களை தேங்காய் சிரட்டைகளைப் போன்று வீடுகளில் மறைத்து வைக்க முடியாது அல்லவா?

இந்த விடயத்தை கூட புரிந்து கொள்ள முடியாமை வருத்தமளிக்கின்றது. இவ்வாறு சென்றால் அரசாங்கம் கூடிய விரைவில் கலைந்துவிடும். நாம் செய்த அபிவிருத்தி திட்டங்களை இந்த அரசாங்கத்தினர் திறந்து வைத்துக் கொண்டு செல்கின்றனர்.

நாட்டில் பிரச்சினைகள் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்கின்றன. லசந்த கொலை தொடர்பிலான உண்மையான விடயங்கள் வெளிவரத் தொடங்கியதும் அந்தக் குற்றச்சாட்டும் எம்மீது சுமத்தப்பட்டது.

விசாரணைகளை மூடி மறைக்காது அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென கோருகின்றோம். எல்லா விடயங்களுக்கும் மஹிந்த பீதியை காண்பித்து எனக்கு நெருக்கமானவர்களை நெருக்கடிக்குள் ஆழ்த்துவது ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.

மரண வீடு ஒன்றுக்குச் சென்றால் என்னைச் சுற்றி புலனாய்வு பிரிவினர் கடமையில் அமர்த்தப்பட்டுள்ளனர் என மஹிந்த தெரிவித்துள்ளார்.