தம்புள்ளை ஹைரியா பள்ளிவாசல் விவகாரத்துக்கு முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்கள் எவ்வித தீர்வும் பெற்றுத்தராத நிலையில் பள்ளிவாசல் நிர்வாகம் இலங்கைக்கு வருகை தந்துள்ள சிறுபான்மை இனங்களின் பிரச்சினைகள் தொடர்பான அறிக்கையாளர் ரீட்டா ஐசாக் நதேயாவின் சிபாரிசுகளையே எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
கடந்த 10 ஆம் திகதி கொழும்பில் ஐ.நா.காரியாலயத்தில் RRT அமைப்பு ஏற்பாடு செய்திருந்த முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும்; ஐ.நா.நிபுணர் ரீட்டா ஐசாக் நதேயாவுக்குமிடையிலான சந்திப்பின்போது தம்புள்ளை பள்ளிவாசலின் சார்பில் அதன் நிர்வாக சபை உறுப்பினர் எம்.ஏ.ரஹ்மத்துல்லாஹ் கலந்து கொண்டு பள்ளிவாசல் பிரச்சினைகளைத் தெளிவுபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அவர் பள்ளிவாசல் தொடர்பான ஆவணங்களையும் சமர்ப்பித்திருந்தார்.
இதேவேளை 2012 ஆம் ஆண்டு பள்ளிவாசல் தாக்கப்பட்டதிலிருந்து பள்ளிவாசலைக் காப்பாற்றிக் கொள்வதற்குப் போராடி வருகிறோம். இதற்காக பல அரசியல் தலைவர்களை நாடியும் இதுவரை எதுவித பலனும் கிடைக்கவில்லை. அதனால் ஐக்கிய நாடுகள் சபை இதில் தலையிட்டு தீர்த்துத் தரவேண்டுமெனவும் கோரியிருந்தார்.
தம்புள்ளை பள்ளிவாசலை அவ்விடத்திலிருந்து அகற்றிக் கொள்வதற்கு இதுவரை பொருத்தமான காணியொன்று வழங்கப்படவில்லை. நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் இனங்காணப்பட்டுள்ள காணி மதுபானசாலைக்கு அருகில் அமைந்துள்ளதால் அக்காணிக்கு பள்ளிவாசல் நிர்வாகமும் பொதுமக்களும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்கள்.
இதேவேளை புதிதாக வேறோர் மாற்றிடத்தில் பள்ளிவாசலை அமைப்பதாயிருந்தால் 2 ஏக்கர் காணியும் தற்போது பள்ளிவாசலுக்கு அருகாமையில் வாழும் 17 குடும்பங்களுக்கு வீடுகள் அமைப்பதற்கான காணிகளும் வழங்கப்படவேண்டுமென பள்ளிவாசல் நிர்வாகம் நகர அபிவிருத்தி அதிகாரசபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நகர அபிவிருத்தி அதிகார சபை தற்போது பள்ளிவாசலுக்கு அருகில் வாழும் குடும்பங்களுக்கு மிகவும் குறைந்த தொகை நஷ்டயீட்டினை வழங்கி அவர்களை அவ்விடத்திலிருந்தும் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
பள்ளிவாசல் நிர்வாகம் அமைச்சர்களான கபீர்ஹாஷிம், எம்.எச்.ஏ.ஹலீம் ஆகியோரிடமும் முறைப்பாடுகளைச் சமர்ப்பித்துள்ளன.
முஸ்லிம் சமயவிவகார மற்றும் தபால், தபால்துறை அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி ஓர் இணக்கப்பாட்டுடன் தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுத் தருவதாக உறுதியளித்துள்ளதாக பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர் எஸ்.வை.எம்.சலீம்தீன் தெரிவித்தார் என்றாலும் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் அமைச்சர்களும் மந்த கதியிலே செயற்படுவதால் ஐ.நா.நிபுணரின் தயவை நாடவேண்டியேற்றபட்டதாகவும் தெரிவித்தார்.
ஏ.ஆர்.ஏ.பரீல்