இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று தரம்சாலாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியினர், இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். ஆனால் தொடக்க வீரர் லாதம் மட்டும் நிலைத்து நின்று விளையாடினார். இவரது ஆட்டத்தால் நியூசிலாந்து அணி 190 ரன்னில் ஆல் அவுட் ஆனது. லாதம் மட்டும் 79 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார்.
இதன்மூலம் தொடக்க வீரராக களம் இறங்கி கடைசி வரை களத்தில் நின்ற முதல் நியூசிலாந்து வீரர் மற்றும் சர்வதேச அளவில் 10-வது வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
இதற்கு முன் ஜிம்பாப்வேயின் கிராண்ட் பிளவர், பாகிஸ்தானின் சயீத் அன்வர், இங்கிலாந்தின் நைட், வெஸ்ட் இண்டீசின் ஜேக்கப்ஸ், ஆஸ்திரேலியாவின் டேமின் மார்ட்டின், தென்ஆப்பிரிக்காவின் கிப்ஸ், இங்கிலாந்தின் ஸ்டீவர்ட், வங்காள தேசத்தின் ஜாவெத் ஓமர், பாகிஸ்தானின் அசார் அலி தொடக்க வீரர்களாக களம் இறங்கி கடைசி வரை அவுட்டாகாமல் இருந்துள்ளனர்.