சதிகளைத் தாண்டிச் செல்லும் வல்லமையை இறைவன் எனக்குத் தந்துள்ளான் : அமைச்சர் றிசாத்

எம்மைத் தட்டிக்கொடுப்பதற்கு பதிலாக வெட்டி வீழ்த்துவதற்கே தொடர்ந்தும் சதி செய்கின்றார்கள், இதன் மூலம் எனது அரசியல் இருப்பை இல்லாமலாக்க முடியுமென்று தப்புக்கணக்கு போடுகின்றார்கள் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

முசலி, வெள்ளிமலையில் (16/10/2016) இடம்பெற்ற மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதி விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போது அமைச்சர் றிசாத் மேலும் கூறியதாவது,

rishad-rizad

கடந்த 16 வருட காலமாக நான் முன்னெடுக்கும் முயற்ச்சிகளுக்கு முட்டுக்கட்டையாக இருந்து, கூட்டங்களை கூடிக் கூடி, அவற்றை எவ்வாறு தடுக்க முடியுமென்று வியூகங்கள் அமைத்து ஒரு கூட்டம் செயற்படுகின்றது. இவர்கள் என்னதான் தாளம் போட்டாலும் இறைவன் எம் பக்கமே இருக்கின்றான். 

மாறிமாறி வந்த தேர்தல்களில் இந்தச் சதிகாரர்களின் எண்ணங்களுக்கு மாற்றமாகவே உங்களின் உதவியுடனும், துஆ பிரார்த்தனையுடனும்  அதிகூடிய வாக்குகளைப் பெற்று, நான் பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டேன். அமைச்சராகவும் நியமிக்கப்பட்டேன். சதிகாரர்களும், சூழ்ச்சிக்காரர்களும் என்னதான் திட்டங்கள் தீட்டினாலும், இந்தப் பிரதேச அபிவிருத்தியில் நான் ஒருபோதும் பின்வாங்கமாட்டேன். சதிகளைத் தாண்டிச் செல்லும் வல்லமையை இறைவன் எனக்குத் தந்துள்ளான்.

 

இந்தப் பிரதேசங்களிலுள்ள உங்களின் பூர்வீகக் குடியிருப்புக்கள் அனைத்தும் காடாகக் கிடந்தபோது, இனவாதிகளின் அச்சுறுத்தல்கள், ஆபத்துக்கள், நச்சரிப்புக்கள் எதையுமே பொருட்படுத்தாது, இந்தப் பிரதேசங்களை கட்டிடங்களாகவும், வாழக்கூடிய குடியிருப்புக்களாகவும் நாம் மாற்றினோம்.

இந்தப் பிரதேசத்தில் தூர்ந்துபோன முக்கிய குளங்களான அகத்திமுறிப்பு வியாயடிக்குளம், கட்டுக்கரைக்குளம் மற்றும் இன்னோரன்ன குளங்களை பலகோடி ரூபா செலவில் புனரமைப்பதற்கு, நீர்ப்பாசன அமைச்சருடன் பேச்சு நடாத்தி, திட்டங்களை செயற்படுத்தத் தொடங்கியுள்ளோம். அத்துடன் மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் கமக்காரர்களால் கோரிக்கை விடுக்கப்பட்ட, குளநீர்ப்பாசனம் தொடர்பான அபிவிருத்தித் தடைகளை நீக்குவதற்கும், குளங்களை பராமரிப்பதற்கெனவும், இந்தப் பிரதேசத்தில் தனியான அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கு அனுமதி பெற்றுள்ளோம்.  

14620126_660750917424290_1107910295_n_fotor

நாங்கள் மேற்கொள்ளும் அபிவிருத்திகளை தடுப்பதற்காகவே இங்குள்ள படித்த கல்விமான்கள் சிலர், அடுத்தடுத்த கூட்டங்களைப் போட்டு, மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி, எவ்வாறு தங்கள் சதி முயற்ச்சிகளை வெற்றிகரமாக்க முடியுமென 24 மணி நேரமும் சிந்தனை செய்து வருகின்றார்கள். எல்லா அரசியல்வாதிகளையும் ஒரே பார்வையில், கறுப்புக் கண்ணோடும், வேற்றுக் கண்ணோடும் இவர்கள நோக்குகின்றனர். அவர்கள் பெற்ற கல்வியை, இங்கு இருக்கின்ற அரசியல் தலைமைத்துவத்தை எவ்வாறு வீழ்த்தலாம்? என்று சிந்திப்பதிலேயே தமது காலத்தைக் கடத்துகின்றனர்.            

இந்தப் பிரதேச அபிவிருத்தியைத் தடுப்பதற்கு இவர்கள் என்னதான் பாடாய்ப் பட்டாலும் இறைவனும், மக்களும் என்னுடனே இருக்கின்றார்கள் என்பதை நான் உறுதியாக நம்புகின்றேன் என்றும் அமைச்சர் கூறினார்.

 

ஊடகப்பிரிவு