படையினரை கேடயமாக வைத்து தமது கொள்ளையடிப்புகளை மறக்க முயற்சிக்கும் ராஜபக்ஸவினர்

FILE IMAGE

பாதுகாப்பு படையினரை கேடயமாக வைத்து தமது கொள்ளையடிப்புகளை மறக்க முயற்சிக்கும் ராஜபக்ஸ கோஷ்டிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலையில், ஜனாதிபதி அதற்கு முற்றிலும் மாறுபாடான ஒன்றை மேற்கொண்டதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

FILE IMAGE
                                                                   FILE IMAGE

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தில் மிகவும் பாரதூரமான வகையில் அரச வளங்கள், அரச நிதி என்பன பெருமளவில் தவறாக பயன்படுத்தப்பட்டன.

ராஜபக்ஸ குடும்பம் மக்களின் பணத்தை தமது தனிப்பட்ட விடயங்களுக்கு பயன்படுத்தினர். விசாரணைகளில் இது தெரியவந்து கொண்டிருக்கின்றது.

மல்வானை, காணி, வீடு, சீ.எஸ்.என் தொலைக்காட்சியில் போன்றவற்றின் ஊடாக ராஜபக்சவினர் மக்களின் பணத்தை கொள்ளையிட்ட விதம் வெளியாகி வருகிறது.

ராஜபக்ஸ ஆட்சிக்காலத்தில் நடந்த மற்றுமொரு பாரதூரமான மோசடி அவன்கார்ட் சம்பவம்.

மக்கள் விடுதலை முன்னணியினரான நாங்கள் இது குறித்து தொடர்ந்தும் கேள்வி எழுப்பி வந்தோம். இதற்கு எதிராக விசாரணை நடத்துமாறு கோரினோம்.

தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் அவன்கார்ட் நிறுவனத்திற்காக குரல் கொடுத்தனர்.

இதற்கு எதிராக ஏற்பட்ட கடும் எதிர்ப்புகளை அடுத்து அரசாங்கத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் பதவி விலகினார். இப்படியான மிகப் பெரிய மோசடிதான் அவன்கார்ட் மோசடி. இதற்கு எதிரான விசாரணை கட்டாயம் நடத்தப்பட வேண்டிய ஒன்று.

ஊழல், மோசடிகள் தொடர்பான விமர்சனங்கள் கடந்த அரசாங்கம் ஆட்சியை இழக்க பிரதான காரணமாகியது.

ஊழல், மோசடிகளுக்கு எதிராக விசாரணைகள் நடைபெறும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஊழல், மோசடிகளை எதிர்த்தன் காரணமாக தற்போதைய அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்தனர்.

இதற்கான பொறுப்பு ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை உட்பட அரசாங்கத்திற்கு முழுமையான வழங்கப்பட்டுள்ளது.

எனினும் விசாரணைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்கள் மக்கள் எதிர்பார்த்த விதமாக தமது செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை.

ஆமை வேகத்தில் விசாரணைகள் நடந்தன. இதன் காரணமாக அவ்வப்போது மக்களின் எதிர்ப்புகள் கிளம்பின.

ஊழல்,மோசடிகளுக்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கோரி நாங்கள் வீதியில் இறங்கி தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வருகின்றோம் எனவும் விஜித ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.