தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர் லசந்தவை கொலை செய்தாரா ?

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர் சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபகப் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் மெய்யான கொலையாளியா என்பது குறித்து விரிவான அடிப்படையில் விசாரணைகள் நடத்தப்பட உள்ளன. லசந்தவை தாமே கொன்றதாக கடிதம் ஒன்றை எழுதி வைத்து நேற்றைய தினம் கேகாலை பிரதேசத்தில் உள்ள தமது வீட்டில், ஓய்வு பெற்ற இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார்.

ஓய்வு பெற்ற புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறும் தரப்பினர் கொலை செய்தனரா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த புலனாய்வு உத்தியோகத்தர் தற்கொலை செய்து கொள்ள நியாயமான காரணங்கள் இருந்தனவா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.

இந்த உத்தியோகத்தரின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்னதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் சென்றுள்ளதுடன் இவர் பிள்ளைகளுடன் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். இராணுவ உத்தியோகத்தர் எழுதிய கடிதம் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த கடிதத்தின் கையெழுத்து தமது தந்தையின் கையெழுத்திற்கு நிகரானது என அவரது மகன் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.