பாகிஸ்தானுடனான உறவுகளை முறித்துக் கொள்ள தயாராகும் வங்காளதேசம்

கோவாவில் வரும் 15, 16 தேதிகளில் ‘பிரிக்ஸ்’ நாடுகளின் மாநாடு நடைபெறவுள்ள நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா கூறியதாவது:-

பாகிஸ்தானில் நடைபெறவிருந்த ‘சார்க்’ உச்சி மாநாட்டை இதில் இடம்பெற்றிருந்த மற்றநாடுகள் புறக்கணித்ததைப் போலவே, இந்த மாநாட்டை நடத்தும் சூழல் பாகிஸ்தானில் இல்லை என்பதால் வங்காளதேசமும் இந்த மாநாட்டை புறக்கணித்தது.

a-sheikh-hasina-story_650_011214033817_011314023447
(வங்காளதேசத்துக்கு சுதந்திரம் பெற்றுத்தர நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரில்) தோற்கடிக்கப்பட்ட சக்தியான பாகிஸ்தானுக்கு வங்காளதேசம் என்ற ஒரு தனிநாடு உதயமானது ஏற்பற்றதாக உள்ளது.

தீவிரவாதம் என்பது உலகளாவிய பிரச்சனையாக இருந்து வருகிறது. எனது தலைமையிலான அரசு தீவிரவாதத்தை ஒழிக்க வேற்பட்ட வகையில் முயற்சித்து வருகிறது. தீவிரவாதத்தைப் பற்றிய விழிப்புணர்வை மாணவ-மாணவியர் மத்தியில் ஏற்படுத்த உதவுமாறு பள்ளி மற்றும் கல்லூரியில் பணியாற்றும் ஆசிரியர்களை நான் வலியுறுத்தி வருகிறேன்.

தங்கள் விட்டுப் பிள்ளைகள் எங்கே செல்கிறார்கள்? யார், யாருடன் எல்லாம் பழகுகிறார்கள்? என்பதை தொடர்ந்து கண்காணிக்குமாறு பெற்றோர்களிடம் அறிவுறுத்தி வருகிறேன். இஸ்லாம் என்பது அமைதியின் அடிப்படையிலான மதம், இதில் வன்முறைக்கு இடமில்லை என அனைவருக்கும் போதிக்கும்படி மதரஸாக்கள் மற்றும் மசூதிகளில் உள்ள மதகுருமார்களை கேட்டுக் கொண்டுள்ளோம்.

எங்கள் நாட்டில் தீவிரவாதம் காலூன்றுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்பதை கடந்த 2008-ம் ஆண்டில் இருந்து எங்கள் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் தெளிவாக உணர்த்தும். அதற்கு முன்னர் ஆயுதங்களை கடத்தும் பாதையாக வங்காளதேசம் இருந்து வந்தது. எல்லைப்பகுதியில் தினந்தோறும் குண்டுவெடிப்பு, தீவிரவாத தாக்குதல் மற்றும் வன்முறை நிலவி வந்தது. இப்போது, அவை எல்லாம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், எங்கள் உள்நாட்டு விவகாரத்தில் மூக்கை நுழைக்கும் பாகிஸ்தானின் முயற்சிகள் எங்களுக்கு ஏற்புடையதாக இல்லை. அந்நாட்டுடனான ராஜாங்கரீதியான உறவுகளை முறித்துக் கொள்வதற்கான நிர்பந்தங்கள் எங்கள் அரசுக்கு பெருகி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.