ஐ.பி.எல். தொடரின் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் பெங்களூர் அணித்தலைவர் விராட் கோஹ்லி, போட்டியின்போது நடுவராக கடமையாற்றிய குமார் தர்மசேனவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையடுத்து சர்வதேச ஒரு நாள் போட்டிகளிலிருந்து விராட் கோஹ்லி ஓய்வு பெறுமாறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள ஐ.பி.எல். தொடரின் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.
இப்போட்டி மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இந்தப் போட்டி 11 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய ஐதராபாத் அணி டேவிட் வோர்னர், ஹென்றிக்ஸ் ஆகியோரின் அரைசதத்தால் 3 விக்கெட்டுகளை இழந்து 135 ஓட்டங்கள் குவித்தது.
போட்டியின் 10ஆவது ஓவரில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. கடைசி ஓவரில் மழையின் வேகம் அதிகரித்த போதும் நடுவர்கள் போட்டியை நிறுத்தாமல் தொடர்ந்து நடத்தினர்.
இதனால் ஸ்டார்க் வீசிய 11ஆவது ஓவரில் இயொன் மோர்கன் அடித்த பந்தை களத்தடுப்பில் இருந்த பெங்களூர் அணித்தலைவர் கோஹ்லி பிடிக்கத் தடுமாறினார். இதனால் ஆத்திரமடைந்த கோஹ்லி, கடைசி ஓவர் முடிந்ததும் நடுவர் தர்மசேனாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இவரை தொடர்ந்து, பெங்களூர் அணியின் விக்கெட் காப்பாளரான தினேஷ் கார்த்திக்கும் தர்மசேனவுடன் விவாதம் செய்தார். அப்போது மற்றொரு நடுவர் அனில் சௌத்திரி இவர்களை சமாதானம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச் சம்பவமானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் விராட் கோஹ்லி ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வுவெடுத்துக் கொண்டு, டெஸ்ட் போட்டிகளில் மாத்திரம் களமிறங்கலாம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் நடுவர் குமார் தர்மசேனவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் இருந்து கோஹ்லி நீக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனால் டோனியின் ஓய்விற்கு பிறகு ஒருநாள் அணிக்கு தலைவராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட கோஹ்லிக்கு தற்போது அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.