முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் முக்கிய பதவிகளை வகித்த ஐந்து பேர் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடிகள், இலஞ்சம் பெற்றுக்கொள்ளல் போன்றன தொடர்பில் எதிர்வரும் சில வாரங்களில் ஐந்து முக்கியஸ்தர்கள் கைது செய்யப்பட உள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
இந்த ஊழல் மோசடிகள் தொடர்பில், இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு, நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு, குற்ற விசாரணைப் பிரிவு மற்றும் புலனாய்வுப் பிரிவு ஆகியவற்றுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 169 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த முறைப்பாடுகள் ஒவ்வொன்றாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
இதேவேளை, ஊடக நிறுவனங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பிலும் எதிர்வரும் வாரங்களில் முறைப்பாடுகள் செய்யப்படக் கூடிய சாத்தியம் உண்டு என குறித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.