ஆசியாவின் விவகாரங்களில் தலையிடாதீர்கள்: அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை

தென் சீனக் கடல் பகுதி தங்களுக்குத்தான் சொந்தம் என்று சீனா, வியட்நாம், தைவான் ஆகிய நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன. மேலும் இப்பகுதியின் சில பகுதிகள் தங்களுக்கு சொந்தம் என்று ஜப்பான், பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே ஆகிய நாடுகள் உரிமை கோரி வந்தன.

south_china_sea_fotor
இந்த நிலையில், தென் சீனக் கடல் பகுதி தொடர்பாக பிலிப்பைன்ஸ் அரசு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது. அந்த வழக்கின் முடிவில் தென் சீனக் கடல் பகுதியில் சீனாவிற்கு உரிமை இல்லை என்று சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

சர்வதேச நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை ஏற்க மறுத்த சீனா தொடர்ந்து தென் சீனக் கடல் பகுதியில் உரிமை கொண்டாடி வருவதோடு கடல் பகுதியில் தனது ராணுவ நிலைகளை கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது. மேலும் இந்தக் கடல் பகுதி முழுவதையும் செயற்கைக் கோள் மூலம் கண்காணித்தும் வருகிறது.

இந்நிலையில், ஆசியாவின் தென் சீனக் கடல் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட வேண்டாம் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீன தலைநகர் பீஜிங்கில் 7-வது ஜியாங்ஷன் பிராந்திய பாதுகாப்பு மன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. புதுவகையான சர்வதேச உறவுகளை உருவாக்குவது கூட்டத்தின் மையமான கருத்தாக இருந்தது. கூட்டத்தில் சீன பாதுகாப்பு துறை மந்திரி சாங் வாங்குவான் பேசியதாவது:-

சில நாடுகள் முழுமையான ராணுவ மேன்மையை உருவாக்க முயற்சிக்கிறது. அதற்காக தன்னுடைய ராணுவ கூட்டணி நாடுகளை தொடர்ந்து பலப்படுத்துகிறது. மற்ற நாடுகளின் செலவில் தன்னுடைய பாதுகாப்பு பலத்தை வலிமைபடுத்துகிறது.

தென் சீனக் கடல் பகுதியில் முழுவதுமாக சீனாவிற்கு உரிமை உள்ளது. புருனே, மலேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம், தைவான் நாடுகள் போட்டிக்கு உரிமை கோருகிறது.

இவ்வாறு தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர், “தென் சீனக் கடல் விவகாரத்தை முறையாக கையாளவில்லை என்றால் அமெரிக்கா-சீனா இடையே சிக்கலாக மாறும். இந்த பிரச்சனைகள் தென் சீனக் கடல் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளையும் பாதிக்கிறது” என்றார்.

இந்த கருத்தரங்கில் ரஷ்யா சார்பில் அந்நாட்டின் பதுகாப்புத் துறை துணை மந்திரி அனடோலி அந்தோனோவ் கலந்து கொண்டார்.

முன்னதாக தென் சீனக் கடல் பகுதியில் சீனாவின் செயற்கை தீவு அருகே அமெரிக்கா சுதந்திரமாக கடல்வழி நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனால் தென் சீனக் கடல் பகுதியில் இரு வல்லரசு நாடுகளிடையே பதற்றம் நிலவி வருகிறது.

அதேபோல் வடகொரியா மேற்கொண்டு வரும் அணு ஆயுத சோதனை குறித்தும் அதற்கு ஏற்பட்டுள்ள எதிர்ப்பு உள்ளிட்டவை குறித்தும் இந்நிகழ்ச்சியில் பேசப்பட்டது.