தமிக முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22-ந்தேதி இரவு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
லண்டனில் இருந்து வந்த தீவிர சிகிச்சை பிரிவு நிபுணர் டாக்டர் ரிச்சர்டுஜான் பீலே மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவக்குழுவும் முதலமைச்சரின் உடல்நிலையை பரிசோதித்து சிகிச்சை அளித்தனர். அமைச்சர்கள், பல்வேறு கட்சி தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் மட்டும் ஆஸ்பத்திரிக்குள் சென்று ஜெயலலிதாவின் உடல்நிலையை பற்றி கேட்டு அறிந்து வருகின்றனர்.
முதலமைச்சர் மேலும் நீண்ட நாட்கள் ஆஸ்பத்திரியில் தங்கி இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டதையடுத்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் மற்றும் மூத்த அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கடந்த 7-ம் தேதி ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி அமைச்சர்களிடம் ஆளுநர் கேட்டறிந்தார். மேலும், மாநில நிர்வாகம் பணிகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
ஏற்கனவே, முதல்வரின் உடல்நிலை கருதி, துணை முதல்வர் அல்லது பொறுப்பு முதல்வரை நியமிக்க வேண்டும் என்று பலர் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், முதல்வரின் பணிகளில் தொய்வு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், அவரது இலாகாக்கள் நிதியமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ளன.
இதுபற்றி ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:-
முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து முதலமைச்சராக தொடர்வார். முதலமைச்சரின் இலாகாக்கள் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட்டுள்ளன. அமைச்சரவை கூட்டங்களுக்கு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்குவார். ஜெயலலிதா நலம்பெற்று திரும்பும்வரை இந்த ஏற்பாடு தொடரும். முதலமைச்சரின் ஆலோசனைப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எனவே, முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் இருந்த பொதுத்துறை, இந்திய ஆட்சிப்பணி, இந்தியக் காவல் பணி, இந்திய வனப் பணி, பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல் மற்றும் உள்துறை ஆகிய இலாகாக்களை நிதியமைச்சர் பன்னீர்செல்வம் கூடுதலாக கவனிப்பார்.