பழுலுல்லாஹ் பர்ஹான்
முன்னாள் ஜனாதிபதியும், குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ இன்று 11 செவ்வாய்க்கிழமை பிற்பகல் மட்டக்களப்புக்கு விஜயம் செய்தார்.
அங்கு விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்கான நினைவுத் தூபி நிர்மாணிப்பு ஆரம்ப நிகழ்விலும், விஷேட ஆசிர்வாத பூஜை நிகழ்விலும் கலந்து கொண்டதோடு விஷேட உரை ஒன்றையும் நிகழ்த்தினார்.
மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம ரஜமஹா விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வுகளில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது விகாரையின் வளாகத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ள புத்தர் சிலை தாங்கிய புதுமதுர கட்டடம், முன்னாள் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டு அங்கு வழிபாடும் நடைபெற்றது.
நிகழ்வின் இறுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம ரஜமஹா விகாரையின் விகாராதிபதியினால் நினைவுச் சின்னம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வுகளில் பௌத்த மதகுருமார்கள், இன்னாள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ,முன்னாள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மட்டு மாவட்ட அமைப்பாளர் அருண் தம்பிமுத்து உள்ளிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
குறித்த நிகழ்வுகளில் பொலிசாரும், விஷேட அதிரடிப்படையினரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.