பிரதமர் ரணில் கைது செய்யப்படுவது உறுதி: வாசுதேவ நாணயக்கார

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் இருவரும் கைது செய்யப்படுவது உறுதியாகி உள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

vasutheva

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

கோப் குழுவின் அறிக்கை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் போது அதில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனின் ஊழல்கள் வெளிப்படும். அவ்வாறு அர்ஜூன் மகேந்திரன் ஊழல்களில் மாட்டிக்கொண்டாரானால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஊழல் தொடர்பில் சிக்கிக்கொள்வார் என்று குறிப்பிட்டார்.

கோப் குழுவின் அறிக்கைகளின் படி அர்ஜூன் மகேந்திரன் கைது செய்யப்படுவார். அவரைத் தொடர்ந்து பிரதமரும் நிச்சயம் கைது செய்யப்படுவார், அதற்கு காரணம் அர்ஜூன் மகேந்திரனுக்கும் பிரதமருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

எந்த ஒரு பொய்யான காரணங்களுக்காகவும் இவர்கள் கைது செய்யப்பட மாட்டார்கள். பாராளுமன்றில் முன்வைக்கப்படும் கோப் குழுவின் அறிக்கையில் அனைத்து விடயங்களும் தக்க ஆதாரங்களுடன் காணப்படும். அதற்கமையவே இவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் சவால் விடுத்தார். 

தற்போது அரசாங்கத்தின் ஒரு முக்கிய பதவியில் இருக்கும் அர்ஜூன் மகேந்திரன் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்வதுடன், முக்கிய ஒப்பந்தங்களின் போதும் அரசுடனேயே இருக்கின்றார். விசாரணைகள் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் ஒருவருக்கு இந்த அளவு சுதந்திரம் கொடுப்பதும், முக்கிய பொறுப்புக்களை ஒப்படைப்பதும் குற்றச் செயல் எனவும் வாசுதேவ தெரிவித்தார்.

மேலும் பலம் பொருந்திய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதும், அந்த நாடுகளுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தங்களும், மற்றும் டிசம்பர் மாதம் செய்துகொள்ள உள்ள எட்கா ஒப்பந்தமும் எதிர்காலத்தில் நாட்டுக்கு எவ்வாறான ஒரு பாதிப்பை ஏற்படுத்தப்போகின்றது என்பது யாருக்கும் தெரியாது. அந்த அளவிற்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சுமத்தினார்.