மகிந்தவை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார் !

download

100 கோடி ரூபா நஷ்ட ஈடு கோரி முன்னாள் ஜனாதிபதி  மகிந்த ராஜபக்ஷ தனக்கு அனுப்பிவைத்துள்ள அறிவித்தல் கடிதம் தனக்குக் கிடைத்துள்ளதாகவும்  இது தொடர்பாக அவரை    நீதிமன்றத்தில்  எதிர்கொள்ள மிகுந்த ஆவலுடன் இருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள  சமரவீர தெரிவித்துள்ளார். 
 நேற்று முன்தினம்  சனிக்கிழமை மாத்தறை நகரில்  இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் இங்கு மேலும் தெரிவிக்கையில்;
 மான நஷ்ட ஈடு கோரி  மகிந்த ராஜபக்ஷ தனது  சட்டத்தரணியூடாக எனக்கு அனுப்பி வைத்த அறிவித்தல் கடிதம்  கிடைத்துள்ளது.அதனை   நான் மகிழ்வுடன்  ஏற்றுக்கொண்டு  அவரை நீதிமன்றத்தில் எதிர்கொள்ள ஆவலுடன் இருக்கின்றேன்.

அன்று நான் கூறிய கருத்துக்கள் தொடர்பாக    நீதிமன்றத்தில் விளக்கமளிக்கத்  தயாராகவே இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கொழும்பில்   இடம்பெற்ற செய்தியாளர்  சந்திப்பொன்றில்,  முன்னாள் ஜனாதிபதி  மகிந்த ராஜபக்ஷவின் குடும்பத்துக்குச் சொந்தமான  18 பில்லியன் அமெரிக்க டொலர்  பெறுமதியான சொத்துக்கள் வெளிநாடுகளில் இருப்பதாகவும் அவற்றைக் கண்டுபிடிக்க நான்கு நாடுகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர்  மங்கள சமரவீர தெரிவித்திருந்த.

இதனை முற்றாக மறுத்த மகிந்த ராஜபக்ஷ, அவரது கருத்து பிழையானது எனவும்  இதனால் தனது நற்பெயருக்குக்  களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆகவே தனக்கு மான நஷ்ட ஈடாக 100 கோடி ரூபாவை வழங்க வேண்டுமெனவும் அதனை 21 நாட்களுக்குள் வழங்காவிட்டால் வழக்குத் தொடர நடவடிக்கையெடுக்கப்படுமெனவும் தனது சட்டத்தரணியூடாக மங்கள சமரவீரவுக்கு அறிவித்தல்  கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார்.
 இந்நிலையிலேயே மங்கள சமரவீர நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில்  இவ்வாறு தெரிவித்துள்ளார்.