தன்னை அச்சுறுத்த வேண்டாம் எனக் கூறி சபாநாயகர் கரு ஜயசூரிய நாடாளுமன்றத்தில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பெறுமதி சேர் வரி சட்டமூலத்தை அமைச்சரவையின் அனுமதியுடன் சரியாக வர்த்தமானியில் அச்சிட்டு வெளியிட்டமை தொடர்பில் அச்சக அதிபர் மற்றும் சட்டமா அதிபர் முன்வைத்த ஆவணங்களை பதில் நிதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன சபையில் தாக்கல் செய்த போதே சபாநாயகர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
சபையில் உரையாற்றிய விமல் வீரவன்ச, எனக்கு தெளிவுபடுத்த இடமளியுங்கள். இந்த ஆவணங்கள் எமது கேள்விக்குரியதல்ல. நாங்கள் பேசுவதற்கு இடமளியுங்கள். நீங்கள் பக்கச்சார்பாக செயற்படுகிறீர்கள் என்றார்.
சபாநாயகர், என்ன சொன்னீர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நீங்கள் அமருங்கள். நான் நேற்று இது குறித்து முடிவை அறிவித்தேன். என்னை அச்சுறுத்த வேண்டாம் என வீரவன்சவுக்கு எச்சரிக்கை விடுக்கின்றேன்.
இதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் வேறு வழி இருக்கின்றது.
சட்டமூலத்தை நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது என சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.