இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தியா முதல் இன்னிங்சில் 316 ரன் குவித்தது. நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 204 ரன்னில் சுருண்டது.
112 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 227 ரன் எடுத்து இருந்தது. ரோகித்சர்மா 82 ரன்னும், கேப்டன் வீராட்கோலி 45 ரன்னும் எடுத்தனர். விருத்திமான் சகா 39 ரன்னும், புவனேஸ்வர் குமார் 8 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று (திங்கட்கிழமை) 4-வது நாள் ஆட்டத்தின்போது தொடர்ந்து ஆடிய இந்தியா 72-வது ஓவரில் 250-வது ரன்னை தொட்டது. அதன்பின்னர் சிறிது நேரத்தில் புவனேஸ்வர்குமார் 23 ரன்னில் வாக்னர் பந்தில் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் இருந்த சகா சிறப்பாக விளையாடி அரை சதத்தை தொட்டார். அவர் 113 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 50 ரன்னை எடுத்தார்.
கடைசி விக்கெட்டாக முகமது ஷமி 1 ரன்னில் போல்ட் பந்தில் அவுட் ஆக, இந்திய அணி 76.5 ஓவர்களில் 263 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்துக்கு 376 ரன் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
விருத்திமான் சகா 58 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். போல்ட், ஹென்றி, சான்ட்னெர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.
376 ரன் என்ற இலக்குடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு, துவக்க ஜோடி டாம் லாதம்-குப்தில் ஜோடி நல்ல துவக்கத்தை அளித்தது. குப்தில் 24 ரன்களில் ஆட்டமிழந்தாலும், லாதம் சிறப்பாக விளையாடி 74 ரன்கள் குவித்தார். இடையில் நிக்கோல்ஸ் 24 ரன்களும், டெய்லர் 4 ரன்களும் எடுத்தனர். 156 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டை இழந்ததால் நியூசிலாந்து அணி தடுமாறியது.
நிதானமாக ஆடி விக்கெட்டை காப்பாற்ற போராடிய ரோஞ்சி, 32 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா ஓவரில் அவுட் ஆனார். அதன்பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன.
இதனால், நியூசிலாந்து அணி 197 ரன்களில் சுருண்டது. இதனால் 178 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் அஸ்வின், ஜடேஜா இருவரும் தலா மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினர். ஷமி 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
இந்த வெற்றியின்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என இந்தியா கைப்பற்றி உள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் இந்தூரில் 8-ம் தேதி தொடங்குகிறது.