அட்டாளைச்சேனை விளையாட்டுப் போட்டியில் குழப்பம்- பிரதேச செயலாளரை செல்லவிடாமல் தடுத்த கழக வீரர்கள் !

ஹஸ்ஸான் அஹமத்

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரை வாகனத்தில் செல்லவிடாமல் தடுத்து ஆர்ப்பாட்டம் செய்ததுடன் அவரை கீழே இறக்கி தமது கோரிக்கையினை நிறைவேற்றிக் கொண்டனர் அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக் கழகத்தினர்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலக மட்ட விளையாட்டுப்போட்டியின் மெய்வல்லுநரி் இறுதிப்போட்டிகள் நேற்று அஸ்ரப் ஞாபகார்த்த விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசீம் கலந்து  கொண்டதுடன் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.

மெய்வல்லுனர் போட்டிகல் இறுதிக்கட்டத்தை நெருங்கியபோது 5000 மீற்றர் ஓட்டத்தில்  ஒரு சுப்பர் சொனிக் கழகத்தில் இருந்து மூன்றுக்கு மேற்பட்டவர்கள் ஓடியதாக போட்டி முடிவடைந்ததன் பின்னர் சோபர் விளையாட்டுக் கழகத்தினர் போட்டி ஏற்பாட்டாளர்களிடமும், பிரதேச செயலாளரிடமும் முறையிட்டனர்.

இந்த விடயத்தில் சமரசத்தை ஏற்படுத்துவதற்காக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபாவும் மத்தியஸ்தர் குழுவும் ஈபட்டபோதும் சமரசத்தை ஏற்படுத்த முடியவில்லை. இதன் காரணமாக விளையாட்டுப் போட்டியை இத்துடன் முடிவுக்குக் கொண்டு வருவதாகவும், பிரச்சினைக்குரிய விடயத்தை மாவட்ட விளையாட்டு அதிகாரிகளுக்கு அறிவித்து அதற்குரிய தீர்வினைப் பெற்றதற்குப் பிற்பாடு போட்டி முடிவுகளை அறிவிப்பதாகவும் பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா அறிவித்ததுடன் பிரதம அதிதி உரையாற்றுவதற்கு வாய்ப்பினையும் வழங்கினார்.

இங்கு பிரதம அதிதி உரையாற்றி முடிந்ததும் சோபர் விளையாட்டுக் கழக வீரா்கள், அங்கத்தவர்கள் பிரதேச செயலாளருக்கு எதிராக கோசங்களை எழுப்பியதுடன் அவரது வாகனத்தைச் செல்லவிடாது தடுத்ததுடன் மைதானத்தின் இரண்டு வழிக்கதவுகளையும் மூடிவிட்டனர். சுமார் முப்பது நிமிடம் வரைக்கும் இந்தப்போராட்டம் நடந்து கொண்டிருந்தது.

கடைசியில் பிரதேச செயலாளர் வாகனத்திலிருந்து இறங்கி வந்து சோபர் விளையாட்டுக் கழகம் மு்னவைத்த கோரிக்கையின் படி அங்கு உரையாற்றியதுடன் அந்தக்கழகத்தினால் குழுப்போட்டிகளில் பெற்ற வெற்றிக்கான கிண்ணங்களை வழங்கிவைத்தார். அத்தோடு ஒட்டு மொத்தமான சம்பியனாகவும் சோபர் கழகத்தின் பெயரை அறிவித்தார்.

இந்த சந்தர்ப்பத்தில்தான் அக்கரைப்பற்று பொலிஸார் மைதானத்திற்குள் பிரவேசித்தனர். சோபர் கழகத்திற்குரிய கிண்ணங்கள்  வழங்கி வைக்கப்பட்டதும் பிரதேச செயலாளர் உடனடியாகவே தனது வாகனத்தில் ஏறிச் சென்றதைக்  காணக்கூடியதாக இருந்தது. இந்த சந்தர்ப்பத்தில் ஏனைய எந்தக்கழகமும் மைதானத்தில் இருக்கவில்லை என்பது விசேட அம்சமாகும்.

மேலும், இந்நிகழ்வுகளை படம்பிடித்துக் கொண்டிருந்த ஊடகவியலாளர் ரி.கே.றகுமத்துல்லாவை படம் பிடிக்க வேண்டாம் என சிலர் அச்சுறுத்தியுள்ளனர் எனவும் தெரியவருகின்றது. இங்கு நடந்த சம்பவத்தில் யார் மீது பிழை உள்ளது என்பதுக்கப்பால் அட்டாளைச்சேனை பிரதேசத்தின் விளையாட்டுத்துறை நாகரிகம் விமர்சிக்கப்படும் அளவிற்கு சென்றுள்ளது.