க.கிஷாந்தன்
இயற்கை அனர்த்த அபாயத்தை எதிர்நோக்கியிருக்கின்ற பத்தனை மவுண்ட்வேர்ணன் பூங்கந்தை தோட்டத்தைச் சேர்ந்த 68 குடும்பங்களுக்கு பாதுகாப்பான இடமொன்றில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 68 வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு அமைச்சர் திகாம்பரம் நடவடிக்கை எடுத்துள்ளார் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
பத்தனை பூங்கந்தை தோட்டத்தில் தற்காலிக குடில்களில் வாழுகின்ற 40 குடும்பங்களுக்கு மலையக புதிய கிராமங்கள் , உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக வழங்கப்பட்ட கூரை தகரங்களை பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் பத்தனை அமைப்பாளர் லெட்சுமணனின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.பிலிப் , உதவிச்செயலாளர் ராஜமாணிக்கம் , இணைப்பாளர்களான , ஜெஸ்டின் ,ஜெயராம் , சோமசுந்தரம் , பணிமனை உத்தியோகஸ்தர்கள் பாக்கியநாதன் , அனுஜா , தோட்ட முகாமையாளர் , தோட்ட உதவி முகாமையாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் சோ.ஸ்ரீதரன் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது:
பத்தனை பிரதேசத்திலுள்ள பூங்கந்தை தோட்ட மக்கள் போதிய அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வருகின்றனர். லயன் குடியிருப்புக்கள் மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன. பல குடும்பங்கள் தற்காலிக குடில்களில் வாழ்கின்றன. சிலர் பாதுகாப்பான இடத்தில் இடம் பெயர்ந்து வாழுகின்றனர். இந்தக்குறைபாடுகள் குறித்து இந்தத் தோட்டத்தைச் சேர்ந்த மக்கள் கடந்த கால அமைச்சர்களிடம் பல முறை எடுத்து கூறியும் எவ்வித பயனும் கிடைக்கவில்லை.
ஆனால் எமது அமைச்சர் திகாம்பரத்தைச் சந்தித்து தமது குறைபாடுகளைத் தெரிவித்த இந்த மக்களுக்கு இன்று விமோசனம் கிடைத்துள்ளது. திகாம்பரத்தின் அமைச்சின் ஊடாக தற்காலிக இருப்பிடங்களில் பொலித்தின் ரெட்டுக்களை கூரைகளில் போட்டுள்ளவர்களுக்கு 200 கூரை தகரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் தோட்டத்தைச் சேர்ந்தவர்களைப் பாதுகாப்பான இடத்துக்கு குடியமர்த்தும் வகையில் 68 வீடுகளைக் கொண்ட புதிய கிராமமொன்றினை அமைச்சர் திகாம்பரம் நடவடிக்கை எடுத்துள்ளார்.
எமது சமூகத்தில் பிறந்து வளர்ந்த தலைவன் ஒருவனால் தான் எமது சமூகத்துக்கு விடிவைப் பெற்றுக் கொடுக்க முடியுமென்பதை இன்று எமது சமூகம் உணர்ந்துள்ளது.எனவே பத்தனை பூங்கந்தைத் தோட்ட மக்கள் வாழ்க்கையில் இனிமேல் சுபீட்சம் ஏற்படும்.